பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை


இந்நூல் எனது சொற்பொழிவு ஒன்றின் எழுத்தாக்கமாகும். 1974-ல் முத்துமோகன், காசி விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், சுப்பிரமணியன், மங்கை ஆகிய ஆறு பேர்களுக்கு முக்கியமான அடிப்படை மார்க்ஸீய நூல்களை அறிமுகம் செய்து வைப்பதற்காக வகுப்புகள் தடத்தினேன். மூன்று சொற்பொழிவுகள் ரிகார்டரில் பதிவு செய்யப்பட்டன. அவற்றுள் இரண்டாவது சொற் பொழிவை சிறிது விரிவுபடுத்தி எழுதியதே இந்த நூல்.

இந்த நூலில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மார்க்ஸீயே தத்துவத்தின் முதலாசிரியர்களின் சமூக வளர்ச்சி பற்றிய ஆய்வுரைகளை அவர்களுடைய மேற்கோள்களிலிருந்தே விளக்க முயன்றுள்ளேன்.

சமுதாயம் மாறுவதற்குரிய காரணம் என்ன? உலக வரலாற்றில் எத்தனை வகையான சமுதாய அமைப்புகள் இருந்து மாறியுள்ளன? சமுதாய வரலாற்றில் எந்தக் கட்டத்தில் அரசு தோன்றியது? வர்க்க சமுதாயத்தில் அரசின் பணி என்ன? வர்க்கமற்ற சமுதாயத்தில் ஆரம்பக் கட்டத்திலும், வளர்ச்சியடைந்த கட்டத்திலும் அதன் பணி எப்படி வேறுபடுகிறது? “அரசு கம்யூனிஸ் சமுதாயத்தில் வாடி உதிர்ந்துவிடும்” என்று மார்க்ஸ் கூறியது எந்தப் பொருளில்? இது பற்றிய கம்யூனிஸ் விரோதிகளின் வியாக்கியானங்களுக்கு லெனினுடைய பதில் என்ன?