பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

இருந்தார். கோம்பை பாளையக்காரர் கம்பம் பள்ளத்தாக்கில் குழப்பத்தை உருவாக்கி வந்தார். இது கி.பி. 1794ல் மதுரை, திண்டுக்கல் சீமைகளின் நிலை.41 இவைகளைக் கண்டு பீதி கொண்ட கும்பெனி நிர்வாகம், பாளையக்காரர்களை ஆயுதம் சேகரிக்கக்கூடாது என பயமுறுத்தியது. கேப்டன் ஆலிவர் தலைமையில் ஒரு சிறு பட்டாளத்தை பழனிக்கும் திண்டுக்கல்லுக்கும் அனுப்பிவைத்து பாளையக்காரர்களை பயமுறுத்திப் பார்த்தது.42

திண்டுக்கல் பாளையக்காரர்களின் கிளர்ச்சித் திட்டம் தீவிர மடைந்தது. கிளர்ச்சிக்காரர்களின் தலைவர் லோகையா நாயக்கர் பழனி பாளையக்காரராக வையாபுரி நாயக்கரை நியமனம் செய்ய ஏற்பாடு செய்தார். ஏனெனில் பழனி பாளையக்காரராக இருந்த வரைப் பிடித்து பரங்கிகள் பாலசமுத்திரம் சிறையில் அடைத்துவிட்டனர். இங்ஙனம் பரங்கிகளுக்கு எதிராக பகிரங்கமாக செயல்படுவதன் மூலம் ஏனைய பாளையக்காரர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கும்பெனியாருக்கு எதிரான அணியைப் பலப்படுத்துவது என்பது அவரது குறிக்கோள்.43 பழனி பாளையக் காரரது முன்னாள் பிரதானி முத்து சேர்வைக்காரர் லோகையா நாயக்கருக்கு பக்கபலமாக விளங்கினார். விருபாட்சி பாளையக்காரரும் இந்த அணியில் சேர்ந்து இருந்தார். இடையக்கோட்டை போன்ற கும்பெனியாரின் ஆதரவு பாளையங்களைத்தாக்கி அழிக்க அவர்கள் திட்டம் திட்டினர்.44 திண்டுக்கல் சீமையின் வடகோடியை ஒட்டி அமைந்து இருந்த மணப்பாறை, அரவக்குறிச்சி பாளையக்காரர்களும் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தனர்.45இவர்கள் அனைவருக்கும் முழு ஆதரவு வழங்கி வந்தவர் கன்னிவாடி பாளையக்காரர்.46 மணப்பாறை, கன்னிவாடி பாளையக்காரர்கள் கும்பெனிக்கலெக்டர் உத்திரவை புறக்கணித்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய "சம்மன்" அழைப்பையும் நிராகரித்-


41 Madurai District Records - vol 1123 (12-11-1799)

42 Francis W: Gazetteer of Madurai (1914). p. 185-308.

43 Madurai District Records, vol 1121 (26-1-1799)

44 Ibid 21-1-1799

45 Ibid 26.3-1799

46 Ibid 28-3-1799

47 Ibid 12-1-1799 and 5-9-1799