பக்கம்:மின்னல் பூ.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உதிர்ந்த சருகு


கண்ணெடுத்தும் பாராமல் காலில் மிதித்தார்கள்;
மண்ணிலே வீழ்ந்தவுடன் மதிப்பெல்லாம் போனதுவோ?
பசையிருந்த போதெல்லாம் பத்துப்பேர் சுகங்காணத்
திசைவிரிந்த மரக்கிளையைச் சீருடனே அணிசெய்தாய்;
காற்றுன்றன் செவிவழியே கனிந்தன்று பாடிவரும்;
வேற்றார்ப் பறவை வந்து மிகப்பேசி நிழல் ஒதுங்கும்:
வாடிநைந்தே உடல் சுருங்கி வறண்டுவிட்டாய் என்றவுடன்
ஓடிவந்து காற்றதுவும் ஒரு கணமும் எண்ணாமல்
குப்புறவே பிடித்துந்திக் கூசாமல் சீறியிங்குக்
குப்பையிலே சாக்கடையில் கொண்டு தள்ளி விட்டதுவே!
காற்றையுமோர் தேவனெனக் கருதுவதும் சரியாமோ ?
சீற்றமதன் மேலெதற்கு? தினமும் இந்தப் பாரினிலே
பண்புச் சிகரமெனப் பசப்புகின்ற மாந்தரிடம்
கண்டதிதுதானே? கைவறண்டால் மதிப்பவர் யார்?

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/34&oldid=1116710" இலிருந்து மீள்விக்கப்பட்டது