பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

105


அதுகாலை தன் உணவுக்காக நல்ல பாம்பு ஒன்றைத் தன்னுடைய கால்களால் பற்றிக் கொண்டு வந்த கருடன் ஒன்று, அவன் தலைக்கு மேல் இருந்த மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து, தான் கொண்டு வந்த பாம்பைக் கொத்தித் தின்ன முயல, அது வலி தாங்காமல் விஷத்தைக் கக்க, அந்த விஷம் அவனுடைய கட்டுச் சோற்றில் விழுந்து கலக்க, அதைக் கவனிக்காமல் சாப்பிட்ட அவன், சிறிது நேரத்தில் அப்படியே மயங்கித் தரையில் சாய்வானாயினன்.

கணவன் கண்கள் பஞ்சடையத் தரையில் சாய்ந்ததைக் கண்ட மனைவி திடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்க்க, அதுகாலை கருடனின் காலடியில் இருந்த பாம்பே நழுவிக் கட்டுச் சாதத்தில் விழ, அங்ஙனம் விழுந்த பாம்பை அக்கணமே கருடன் பாய்ந்து வந்து மீண்டும் தன் கால்களால் பற்றிக் கொண்டு பறக்க, 'ஐயோ, பாம்பின் விஷமல்லவா கட்டுச் சாதத்தில் விழுந்து கலந்துவிட்டதுபோல் இருக்கிறது!’ என்று பதறித் துடித்த அவள், அங்குமிங்குமாகப் பித்துப் பிடித்தவள் போல் ஓட, அந்த வழியே ஆற்றில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்த சாமியார் ஒருவர் அவளைத் தடுத்து நிறுத்தி, ‘என்னம்மா, என்ன?’ என்று விசாரிக்க, அவள் கலங்கிய கண்களுடன் நடந்ததைச் சொல்ல, 'கவலை வேண்டாம். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நீ போய் உன் கணவனுக்கு அருகிலேயே இரு; இதோ, நான் வருகிறேன்!' என்று சொல்லிவிட்டு எங்கேயோ சென்ற அவர், சிறிது நேரத்துக்கெல்லாம் ஏதோ ஒரு பச்சிலையும் கையுமாக வந்து, அதைப் பிழிந்து அவன் வாயிலும் மூக்கிலும் விட்டுத் திப்பியை அவனுடைய தலையின் உச்சியிலே வைத்துக் கட்ட, அடுத்த ஐந்தாவது நிமிஷம் அவன் தூங்கி விழித்தவன் போல் எழுந்து உட்கார்ந்து, தனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்திருந்த சாமியாரையும் சம்சாரத்தையும் மாறி மாறிப் பார்த்து விழிக்க, சாமியார் நடந்ததைச் சொல்லிவிட்டு, 'இனிமேல்