பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

117

அதனால்தான் ‘சீச்சீச்சீ!' என்றேன்!' என்று நாளை சொல்லவிருந்த பொய்யை இன்றே சொல்லி, அவர் அவளைச் சமாளிப்பாராயினர்.

மறுநாள் காலை ஏற்கெனவே திட்டமிட்டபடி அம்பலவாணரும் ஆனந்தியும் முதல் வகுப்புப் பிரயாணிகள் அறையில் சந்திக்க, 'நீங்கள்தானே பெட்டி எண் எட்டு எட்டு எட்டு?' என்று அவள் அவரைக் கேட்க, 'ஆமாம், நானேதான் அந்த எட்டு எட்டு எட்டு!’ என்று அவர் கொஞ்சம் எட்டி நின்றே நெளிய, அவள் கொஞ்சம் கிட்ட வந்து, ‘ஏன் இப்படி நெளிகிறீர்கள்? இங்கேதான் இந்தக் கூத்தெல்லாம்! மேல் நாட்டில் அறுபது எழுபது வயது கிழவர்கள்கூட ‘டீன் ஏஜர்'சைக் கலியாணம் செய்துகொள்கிறார்களே, அவர்களெல்லாம் இப்படியா நெளிகிறார்கள்?' என்று சிரித்துக் கொண்டே அவருடைய தொந்தியின்மேல் ஒரு செல்லத் தட்டுத் தட்ட, ஐயோ, தட்டாதே! என்னை என்னவோ பண்ணுகிறது!' என்று அவர் பின்னும் நெளிந்து, 'ஆமாம், உன்னுடைய மாஜி கணவர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ என்று கேட்க, ‘அவர் ஒரு குஸ்தி பயில்வான்; சென்னையில் இருக்கிறார். முதல் பந்தயத்தில் எதிரியின் முப்பத்திரண்டு எலும்புகளை முறித்த அவர், அடுத்த பந்தயத்தில் அறுபத்து நாலு எலும்புகளையாவது முறிக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராமல் 'கசரத்' செய்துகொண்டிருக்கிறார்!' என்று அவள் சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு அவருடைய முகத்தைப் பார்க்க, அதைக் கேட்டு, ‘ஆ!’ என்று வாயைப் பிளந்த அவர் அப்படியே மூர்ச்சை போட்டுக் கீழே விழுவாராயினர்.

அவள் 'இடி, இடி’, என்று சிரித்துக் கொண்டே அவரைத் தூக்கி உட்கார வைத்து, முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து முந்தானையால் விசிற, அவர் கண் விழித்து, ‘இதென்ன வம்பு? என் விலாசம் அவனுக்குத் தெரியுமா?' என்று நடுங்கிக் கொண்டே கேட்க, அவள் மேலும் சிரித்து,