பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

வரும் போது மறக்காமல் வெள்ளைக்கார மனைவியுடன் இல்லை, வெள்ளைக்காரத் துணைவியுடன் இந்தியாவுக்கு வருவானாயினன். அந்தத் துணைவியுடன் நேரே வீட்டுக்குப் போனால் தந்தை என்ன சொல்வாரோ, என்னவோ என்று சற்றே பயந்த சாம், எதற்கும் அவளை ஓர் ஓட்டல் அறையில் விட்டுவிட்டுப் போவோம் என்று விட்டுவிட்டுப் போக, முன் ஹாலில் யாரோ ஒருவனுடன் உட்கார்ந்து அரட்டை யடித்துக் கொண்டிருந்த அவன் தங்கை மிஸ் பம்மா, ‘வா, அண்ணா!’ என்று அவனை வரவேற்று, ‘இவர்தான் என் பாய் பிரெண்ட் மிஸ்டர் ஜும்மா!’ என்று தன்னுடன் இருந்தவனை அவனுக்கு அறிமுகம் செய்து வைக்க, ‘என்ன துணிச்சல் இவளுக்கு! எங்கேயோ இருந்த எவனோ ஒருவனை இங்கே அழைத்து வந்து வைத்துக் கொண்டு அரட்டையடிப்பதோடு நில்லாமல், அவனை எனக்கு அறிமுகம் வேறு செய்து வைக்கிறாளே?’ என்று கருவிக் கொண்டே அவன் மேலே இரண்டடி எடுத்து வைக்க, பின் ஹாலில் யாரோ ஒருத்தியுடன் உட்கார்ந்து சரஸமாடிக் கொண்டிருந்த அவன் தம்பி மிஸ்டர் பால், ‘வா, அண்ணா!’ என்று அவனை வரவேற்று, ‘இவள்தான் என் கெர்ல் பிரெண்ட் மிஸ் பெர்ல்!' என்று தன்னுடன் இருந்தவளை அவனுக்கு அறிமுகம் செய்து வைக்க, ‘என்ன அக்கிரமம் இது! இந்த வீட்டில் இவர்களைக் கேட்பார் யாருமில்லையா?' என்று தன்னை மறந்து ஆத்திரத்தின் எல்லைக்கே போய்விட்ட மிஸ்டர் சாம், ‘அம்மா எங்கே?' என்று அவசர அவசரமாகக் கேட்க, ‘ஏன், அவள் நம் எஸ்டேட் பாஸுடன் உலாவப் போயிருக்கிறாள்!' என்று தம்பி சொல்வானாயினன்.

‘எஸ்டேட் பாஸா! அவர் இப்போது எங்கிருந்து வந்தார்?’ என்று அண்ணன் ஒன்றும் புரியாமல் கேட்க, 'லண்டனிலிருந்துதான் வந்திருக்கிறார்!' என்று தம்பி சொல்வானாயினன்.