பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

எங்கேயாவது போய்விடுவான். அவனைக் காணாமல் அம்மா மங்களம் அழுவாள்; அப்பா மணவாளன் அவனைத் தேட வேண்டிய இடங்களிலெல்லாம் தேடிவிட்டு, கடைசியாகப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் எழுதிக் கொடுத்து விட்டு, 'பையனைக் காணோம்; கண்டுபிடித்துத் தருவோருக்குப் பரிசு ரூபா ஐந்நூறு' என்று பத்திரிகைகளில் அவன் படத்தைப் போட்டு விளம்பரமும் செய்வார். இரண்டு நாட்களுக்கெல்லாம் யாராவது ஒருவன் வந்து அவனைப் பற்றி 'டிப்'ஸைக் கொடுப்பான்; அதன்படி போய்ப் பார்த்தால் அவன் அங்கே இருப்பான். ‘ஏண்டா, இப்படிச் செய்கிறாய்?' என்றால், 'நான் ரோலக்ஸ் வாட்ச் வேண்டுமென்று கேட்டேனே, வாங்கிக் கொடுத்தீர்களா? ஸ்கூட்டர் வேண்டுமென்று சொன்னேனே, வாங்கிக் கொடுத்தீர்களா?' என்று இப்படி ஏதாவது சொல்வான். அப்பா அவற்றை வாங்கிக் கொடுப்பதோடு, அவனைப் பற்றிய ‘டிப்ஸ்’ கொடுத்தவனுக்கும் ரூபா ஐந்நூறு அழுது வைப்பார்.

அத்துடன் அவரைப் பிடித்த தலைவலி விடுமா என்றால் விடாது. சில நாட்களுக்கெல்லாம் அவனுக்குப் பதிலாக அவனுடைய ரோலக்ஸ் வாட்ச்சோ, ஸ்கூட்டரோ காணாமற் போய்விடும். ‘எங்கே போச்சு?' என்று அப்பா கேட்க வேண்டியதுதான் தாமதம், பையன் மறுபடியும் காணாமற் போய்விடுவான். அதைத் தொடர்ந்து அம்மாவின் அழுகை, அப்பாவின் தேடல், போலீஸில் புகார், பத்திரிகைகளில் விளம்பரம், பரிசு ரூபா ஐந்நூறு எல்லாம் தொடரும், தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்படி ஒரு முறையா, இரண்டு முறையா? ஏழெட்டு முறை அவனைத் தேடிப் பிடித்து அலுத்துப்போன அவன் அப்பா, ஒரு நாள் அது குறித்து எங்கள் விக்கிரமாதித்தரைக் கலந்து ஆலோசிக்க, ‘இப்படியும் பிள்ளை உண்டா? அந்தப் பிள்ளையைப் பார்ப்பதற்கு முன்னால் அவனுடைய வீட்டை நானும் சிட்டியும் பார்க்க வேண்டுமே?' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'அதற்கென்ன வாருங்கள்!' என்று அவன்