பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

267

காத்திருக்கிறாள்? சட்டையைக் கழற்றி மாட்டியதும் அவளேதான் வந்து எடுத்துக்கொண்டு விடுகிறாளே!' என்று பாதாளம் பரிதாபமாகச் சொல்ல, 'அப்புறம் என்ன?’ என்று விக்கிரமாதித்தர் விழிக்க, ‘அதுதானே தெரியவில்லை எனக்கும்!' என்று பாதாளமும் அவருடன் சேர்ந்து விழித்துக் கொண்டே சொன்னதாவது:

‘முன்னெல்லாம் 'அடி, பவானி!' என்று கூப்பிட்டால் போதும்; 'என்ன, அத்தான்!' என்று தித்திக்கக் குழைந்து கொண்டே வந்து எதிரே நிற்பாள். இப்பொழுது என்னடா. என்றால், ‘அடி என்ன அடி? இனிமேல் ‘அடி!’ என்று சொன்னால் இந்தக் கரண்டியாலேயே உங்களை நான் அடிப்பேன்!' என்று தன் கையிலுள்ள கரண்டியைக் காட்டுகிறாள். ‘சரி' என்று 'அடி'யை விட்டுவிட்டு, 'பவானி!' என்று கூப்பிட்டுப் பார்த்தேன்; ‘வெறும் பவானி என்ன வேண்டியிருக்கிறது, பவானி? அடுத்த வீட்டுக்காரரைப் பாருங்கள்; அவர் தம் மனைவியை வெறும் கமலா என்றா கூப்பிடுகிறார்? 'கமலாக்கண்ணு’ என்று செல்லமாகக் கூப்பிடவில்லையா? அதே மாதிரி நீங்களும் கூப்பிட்டால் என்னவாம்?' என்றாள். 'சரி' என்று நானும் 'பவானிக் கண்ணு’ என்று கூப்பிட்டேனோ இல்லையோ, ‘என்னையா மாமா, கூப்பிட்டீர்கள்?’ என்று கேட்டுக் கொண்டே எதிர் வீட்டுக் குழந்தை வந்து எனக்கு எதிரே நின்றது. அதைப் பார்த்து நான் சிரித்ததுதான் தாமதம்; 'இதெல்லாம் உங்கள் சூழ்ச்சி! வேண்டுமென்றே நீங்கள் என்னைக் கூப்பிடுவது போல் எதிர்வீட்டுக் குழந்தையைக் கூப்பிட்டிருக்கிறீர்கள்!' என்றாள். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, பவானி! உன் பெயரும் இந்தக் குழந்தையின் பெயரும் ஒண்ணு; அதோடு ‘கண்ணு’ என்று குழந்தையைத்தானே கூப்பிடுவார்கள் என்பது இதற்குத் தெரிந்திருக்கிறது அதனால்தான்...’ என்று நான் மேலே சொல்லி முடிப்பதற்குள், 'இந்தக் குழந்தைக்குத் தெரிவதுகூட எனக்குத் தெரியவில்லை என்கிறீர்கள்; அப்படித்தானே?' என்று அவள் என்மேல் எரிந்து