பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

அவன் விக்கிரமாதித்தரிடம் கொடுக்க, அவர் அந்தச் சீட்டுக்களை வாங்கி அவற்றின் எண்களோடு பரிசு விழுந்த சீட்டுக்களின் எண்களை ஒப்பிட்டுப் பார்க்க, அதிலிருந்த எண்பது சீட்டுக்களில் ஒன்றுக்கு இரண்டாவது பரிசாக ரூபா பத்தாயிரம் வந்திருப்பதைக் கண்டு, 'இதோ பார்த்தாயா, இந்தச் சீட்டுக்குப் பரிசாக வந்திருக்கும் ரூபா பத்தாயிரம் தான் உன் மனைவியின் திடீர் ஆசைகளுக்கெல்லாம் காரணம்!' என்று சொல்ல, 'அப்படியா சங்கதி? மூர் மார்க்கெட்டிலே செப்படி வித்தை காட்டிப் பிழைப்பவன்தான் ஜனங்களை ஆசை காட்டி மோசம் செய்கிறான் என்றால், அரசாங்கமுமா அப்படிச் செய்ய வேண்டும்? அதைவிட கள்ளுக்கடைகளையே மறுபடியும் திறந்துவிடலாம்போல் இருக்கிறதே? என் மனைவிக்குப் பத்தாயிரம் ரூபா வந்திருக்கிறதென்றால் என்ன அர்த்தம்? பத்தாயிரம் பேருக்குப் பத்தாயிரம் ரூபா போயிருக்கிறது என்றுதானே அர்த்தம்? ‘அடுத்த வீட்டுக்காரனைப் பட்டினி போட்டுவிட்டுச் சாப்பிடுபவன் அயோக்கியன், திருடன்!' என்று சொன்ன காந்தி மகான் பிறந்த நாட்டிலா இப்படியெல்லாம் நடப்பது? இது அநியாயமில்லையா?' என்று பாதாளம் பிரலாபிக்க, ‘நியாயம் அநியாயத்தையெல்லாம் இப்போது நீ பார்க்கக் கூடாது. உனக்குப் பத்தாயிரம் கிடைத்ததா, உன் மனைவி சொல்வது போல் மாடி வீட்டுக்குக் குடியேறு; ஸ்கூட்டர் வாங்கு, டைனிங் டேபிள் வாங்கு! நைலான் சாரி வாங்கு; கூலிங் கிளாஸ் வாங்கு! அவள் சொல்வதுபோல் அவளைத் தூக்கி ஸ்கூட்டருக்குப் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு பீச்சுக்கோ, சினிமாவுக்கோ போ! அங்கே நீ அவளைக் கிள்ளு; அவள் துள்ளட்டும். அவள் உன்னைக் கடிக்கட்டும்; நீ சிரி! பாக்கிப் பேரைப் பற்றி அரசாங்கத்துக்கு இல்லாத கவலை உனக்கும் எனக்கும் என்னத்துக்கு? அவர்கள் நாசமாய்ப் போகட்டும்!' என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் சம்பந்தப்பட்டவர்களை ஆசீர்வதித்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைப்பாராயினர்."