பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

323

31

முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா சொன்ன

கைகுவித்த கனவான் கதை

"கேளாய், போஜனே! 'தேசூர், தேசூர்' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே 'தெய்வசிகாமணி, தெய்வசிகாமணி’ என்று ஒரு கிரகஸ்தர் உண்டு. 'தான் உண்டு, தன் குடும்பம் உண்டு' என்று வாழ்ந்து வந்த அவர் ஒரு நாள் காலை வழக்கம்போல் வெளியே செல்ல, வழியில் அவரைப் பார்த்த கனவான் ஒருவர் சிரம் தாழ்த்திக் கரங் குவித்துக் காலே அரைக்கால் சிரிப்புடன் அவரை வணங்க, ‘யார் இவர்? இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறோம் இவரை? எப்படி அறிமுகமானார் இவர்?’ என்று ஒன்றும் புரியாமல் ‘பதிலுக்கு இவரை வணங்குவதா, வேண்டாமா?’ என்று ஒரு கணம் யோசித்து, மறுகணம், 'எதற்கும் வணங்கித்தான் வைப்போமே!' என்று வணங்கிவிட்டு அவர் மேலே செல்வாராயினர்.

ஆனாலும் அவர் மனம் அவரைச் சும்மா விடவில்லை; ‘யார் அந்தக் கனவான், அவரை எங்கே பார்த்தோம்?’ என்று வழி முழுவதும் அவரைச் சதா அரித்து எடுத்துக்கொண்டே இருந்தது. அது மட்டுமல்ல; அவருடைய ஞாபகசக்தியின் மீதே அவருக்கு கோபம் கோபமாக வந்தது. ‘அப்படி என்ன வயதாகிவிட்டது தனக்கு? அதற்குள் இத்தனை ஞாபக மறதியா?' என்று அவர் தன்னைத் தானே கடிந்து கொண்டார். திரும்பிப் போய், ‘யார் நீங்கள்? என்னை இதற்கு முன் எங்கே பார்த்தீர்கள்?’ என்று அந்தக் கனவானையே