பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

35

ஒரு செல்வந்தர் வீட்டுக்குச் சென்று, ‘ஐயா, இன்றிரவு இங்கே தங்க எங்களுக்குக் கொஞ்சம் இடம் கொடுப்பீர்களா?' என்று கேட்க, 'கொஞ்சம் என்ன, நிறைய உண்டு!' என்றார் அவர்.

காடு மலையெல்லாம் கால் கடுக்க நடந்து வந்த தம்பதியர் அறுவரும், 'அப்பாடா, அம்மாடி!’ என்று அமர்ந்து, தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க, ‘இந்த உலகத்திலே எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார் செல்வந்தர்.

'அன்ன சுகமே பெரிய சுகம்!' என்றார் ஒருவர்.

‘பெண் சுகமே பெரிய சுகம்!' என்றார் இன்னொருவர்.

‘நித்திரை சுகமே பெரிய சுகம்!' என்றார் மற்றொருவர்.

'அப்படியா?' என்ற செல்வந்தர், ‘அன்ன சுகமே பெரிய சுகம்!’ என்ற தம்பதியருக்கு அறுசுவையோடு அன்னமிடச் சொன்னார்; ‘பெண் சுகமே பெரிய சுகம்!' என்ற தம்பதியருக்கு ‘மலர் மஞ்சம்' தயாரித்துக் கொடுக்கச் சொன்னார்; ‘நித்திரை சுகமே பெரிய சுகம்’ என்ற தம்பதியருக்கு ‘இலவம் பஞ்சு மெத்தை' போடச் சொன்னார். இப்படியாகத்தானே அவரவர்கள் விரும்பியதை அவரவர்களுக்குச் செய்து கொடுத்துவிட்டு, அவர் தூங்கப் போக, நடு இரவில் யாரோ ஒருவர் வந்து அவருடைய அறைக் கதவைத் தட்ட, 'யார் அது?’ என்று கேட்டுக்கொண்டே வந்து கதவைத் திறந்தார் அவர்.

‘நான்தான்!' என்றார் வந்தவர்.

‘நான்தான் என்றால்... ?'

‘பெண் சுகமே பெரிய சுகம் என்றேனே, அவன்தான் நான்!' என்றார் வந்தவர்.

‘ஓ, என்ன விஷயம்?’ என்றார் வீட்டுக்குரியவர்.

‘பசிக்கிறது!' என்றார் வந்தவர்.