பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

ஆமோதிப்பவர் போல் புன்னகை புரிந்தார் அவர். மரத்தால் செய்யப்பட்ட ஆசனத்தின் மீது புலித்தோல் விரிக்கப்பட்டிருந்தது. மகாஸ்வாமிகள் அதன்மீது அமர்ந்தார்கள். உட்காருவதற்கு அறிகுறியாக என்னை நோக்கினர். நானும் சற்றுத் தொலைவில் உட்கார்ந்தேன். ஏவலரை நோக்கினர். அவர் அந்த அறையை விட்டு வெளியேறினார். நாற்புறமும் என் கண்களை வேகமாகச் சுழற்றினேன். மகாஸ்வாமி எளிய தோற்றமளித்தார்; ஒளி வீசினர்; கம்பீரமாக விளங்கினர். உபநிஷத ரிஷிகளே நினைவூட்டும் தோற்றம். என்மீது வைத்த கண் மாறாமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று பேசத் தொடங்கினர். எனது நட்சத்திரம், எனது ஜாதகம், எனது குடும்ப பூஜா முறை, எனது தந்தையிடம் நான் கொண்ட பேரன்பு முதலியவற்றையெல்லாம் ஒன்று தவறாமல் கூறினர். நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். மீண்டும் மீண்டும் விழுந்து நமஸ்கரித்தேன். கண்களில் நீர் பெருகின. வார்த்தைகள் வரவில்லை. "உனது மார்பில் உள்ள அறிகுறிகள் நீ யார் என்பதைக் காட்டிவிட்டன. குழந்தாய் உனக்கு உபதேசம் செய்ய வேண்டிய சமயம் வந்து விட்டது" என்றார் அவர்.

இன்னதென்று விவரிக்க முடியாததொரு மாறுதல் என்னை ஆட்கொண்டது. உள்ளத்திலே அமைதி ஏற்பட்டது. மகாஸ்வாமி என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை மூலம் ஒரு பரமானந்த அநுபவத்தை எனக்களித்தார். இதயத்துடன் இணைந்திருந்த புத்தி விடுதலை பெற்றது. சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. உள்நோக்கும் சிந்தனையும்