பக்கம்:முகவரிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில சமயங்களில் சொற்கள் எவ்வாறு சிதைந்து பொருள் கொள்ளப்படுகின்றன என்பதற்குப் பார்ப்பனர்கள் பயன்படுத்தும் நல்ல தமிழ்ச்சொற்களை சான்றாகக் காட்டலாம். 'இல் என்பதை 'அகம்' என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. அகத்திற்குப் போகிறேன் என்று சொல்வதை ஆத்துக்குப் போகிறேன் என்று சொல்லிச் சிதைத்துவிடுகின்றனர். அதுபோல்தான் அம்மாஞ்சி என்பதும், அம்மாஞ்சி என்றால் ஒன்றும் தெரியாதவன் 'சுத்த அம்மாஞ்சி' என வழக்கில் உள்ளதை இந்த அகராதி சுட்டிக் காட்டுகிறது.

உண்மையில் அது அழகான, அர்த்தமுள்ள தமிழ்ச் சொல். அம்மாவின் உடன்பிறந்தார் அம்மான். 'அம்மான் சேய்' மாமன் மகன் என்பதன் மரூஉ (ரா ராகவையங்கார் தம் மாமன் மகன் மு.இராகவையங்காரை அம்மான் சேய் என்று குறிப்பிடுவார்)

'எவர்ணமான சிறை' என்பதற்கு யெளவனமான பேரழகி என்று பொருள் காணும்போது இன்பமாக இருக்கிறது. சிறை வைத்துப் பாதுகாக்க வேண்டிய அழகு என்பதற்காகச் சிறை என்று கிராமத்தார் குறிப்பிட்டிருக்கலாம். கர்ப்பிணியைக் குறிப்பிட 'ஈருசுரு' என்பதும் பொருள் பொதிந்த சொல் அல்லவா? சொலவம் என்று பழமொழியையும் நாட்டார் பாடல் என்று நாட்டுப் பாடலையும் குறிப்பிடுகிறார் கி.ரா. இது பிற பகுதிகளில் அறியப்படாததாக இருக்கலாம். அகராதியைத் தொடர்ந்து பயிலும்போது புரியும்.

நம் பாட்டியார், தாயார்காலத்து நகைகள் இன்று இல்லை. அவற்றின் பெயர்களை இந்த அகராதி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கிராமத்து அணிகலன்களையும் வங்கி (குத்துவாள்) தரங்கு (வேல்கம்பு) போன்ற ஆயுதங்களையும் கண்டுகொள்ள முடிகிறது.

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/61&oldid=968521" இலிருந்து மீள்விக்கப்பட்டது