பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

79


4. கண்ட கண்ட நேரத்தில் கண்ட கண்ட பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிட்டவுடன் வாயைக் கொப்பளித்துச் சுத்தப்படுத்தவும். சதவிகித உணவு (Balanced Diet) சாப்பிடுவதால் சீரான செழுமையான பற்கள் எப்பொழுதும் இருக்க உதவி செய்யும்.

5. அதிகமாக இனிப்புப் பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். படுக்கப் போகுமுன் வாய் அலம்பாமல் படுத்துவிட்டால், பற்களுக்கு அடியில் தங்கியிருக்கும், உணவுத் துகல்களை நோய்க்கிருமிகள் பற்றிக் கொண்டு உங்கள் பற்களைச் சொத்தையாக்கி விடும். ஆட்டம் காண வைத்துவிடும். விழ வைத்து விடும். முக அழகையும் சிதைத்து விடும்.

வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் பற்களை நாசமாக்கி விடும் என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால் முக அழகு எப்படிச் சிதைகிறது என்பதுதான் எங்களுக்கு விளங்கவில்லை என்ற சந்தேகம் உங்களுக்கு இப்போது எழுந்து இருக்கிறது.

பற்கள் கம் என்ற (Gum) ஈறினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மேல்வரிசைப் பற்களின் மேலேயுள்ள அந்த ஈறானது மேடாக இருப்பதால் மேலுதடு எப்பொழுதும் சீராக மேடாக மூக்கின் அடிப்பாகத்தைத் தொட்டுக் கொண்டு முகத்திற்கு ஒரு கம்பீரமான அழகைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஈறின் மேடான தன்மை குறையாமல், கரையாமல் இருக்கும் வரை முக அழகு வளமையாகவே தெரியும்.