பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகனுரை 'திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன்’ என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றிப் புகழப்பட்டவர் கவியரசர் முடியரசனார். மிகப்பெருங் கவிஞராகத் தமிழுலகத்தால் அறியப்பட்டாலும் தமிழர்கள் அவரைச் சரிவர வெளிக்காட்ட வில்லை. அவரும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. விளம்பர வெளிச்சம் அவர் மீது வீசவில்லை. அவரும் விளம்பரத்தை விரும்பவில்லை. குடத்திலிட்ட விளக்காகவே வாழ்ந்தார். வறுமை வாட்டியபோது வணங்கா முடியரசராக வாழ்ந்தார். பெருமை வாய்த்த பொழுது ஏழைத் தமிழாசிரியராகவே நடந்தார். 'உண்டாலம்ம இவ்வுலகம்..” என்னும் சங்கப் பாடலுக்குச் சான்றாகத் திகழ்ந்தார். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ யாரிடத்தும் வளைந்ததில்லை. வளமான வாழ்வு நாடியோ, வசதியான பதவி தேடியோ எவரிடத்தும் பணிந்ததில்லை. தன்னலத்திற்காகத் தன்மானத்தை இழந்த தில்லை. அவரது சிந்தனை, சொல், கவிதை எல்லாமே தமிழ், தமிழர், தமிழ்நாடே தமிழே அவரது மூச்சு கவிதையே அவரது வாழ்வு. தமிழ் பாடுங்குயிலாகக் கவிதை கீதமிசைத்த அக்கவி வானம்பாடி வாழ்வில் வசந்தத்தைக் கண்டதில்லை; சோகத்தைச் சுவைத்ததுண்டு. வல்லுாறென வாட்டுங் கவலைகள் வட்ட மிட்டதுண்டு. சுழன்றடிக்கும் வேதனைப் புயல்கள் வீசியதுண்டு. எதனையும் எதிர்கொண்டு வாய்மையே சிறகாய்க் கொண்டு கவிபாடிப் பறந்தது அந்தப் பாட்டுப்பறவை. ‘பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயனம்’ என்னும் இத்தன் வரலாற்று நூலை என் தந்தையார் 1990ஆம் ஆண்டில் எழுதி முடித்திருந்தார். அவ்வாண்டு முதல் 1998இல் இயற்கை எய்தும் வரை நோயின் தன்மையால் அவர் படுக்கை நிலைக் குள்ளானார். நோயுருவதற்குப் பல்லாண்டுகட்கு முன்பிருந்தே அவரது பல படைப்புகள் வெளிவராமல் முடங்கிக் கிடந்தன. இவை பற்றியெல்லாம் அவர் என்னிடம் ஏதும் கூறியதில்லை.