பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகனுரை і х அவரது இறுதிக்காலத்தில்தான் அவற்றை நான் கண்ணுற நேர்ந்தது. அவற்றை நூல்களாக வெளியிட முனைந்தேன். அவர் வாழுங் காலத்திலேயே அவற்றை வெளிக்கொணர என்னால் இயலவில்லை. அவரின் மறைவுக்குப் பிறகே அப்படைப்புகளைப் படித்துத் தொகுத்து அரும்பாடுபட்டு இத்வரலாறு தவிர மற்ற அனைத்தையும் நூல்களாக வெளிக் கொணர்ந்தேன். அவற்றை எந்தை இருந்து கண்டு மகிழாமல் போய்விட்டாரே என்று எண்ணுந்தோறும் என்விழிகள் பொழிகின்றன. என் தந்தையார் வாழ்வில் நானறித்த செய்திகளைக் கூறும் பொருட்டும், இத்தன் வரலாற்றில் அவர் என்னைச் சாடியுள்ளது குறித்து என்னிலை விளக்கம் அளிக்கும் முகத்தானும், மகனுரை' என்ற (பதிப்புரை, முன்னுரை, அணிந்துரை போன்று) ஒன்றை எழுதி அதனை இந்நூலில் சேர்த்து வெளியிடலாம் என்று எண்ணி இத்தன் வரலாற்றை மட்டும் வெளியிடாது வைத்திருந்தேன். ஆனால், என் அன்னையும் நோயுற்று படுக்கைக்காளானமை, என் குடும்பச் சூழல், அலுவலகப் பணிச்சுமை, பொதுப்பணிகள், இன்னோரன்னவற்றால் என்னால் மகனுரை எழுத இயலாமல் காலச் சக்கரம் உருண்டோடியது. என் நண்பர்கள், பதிப்பகத்தார் எனப் பலர் இந்நூலை வெளியிடத் தரும்படிப் பலமுறை என்னிடம் வேண்டியும், மகனுரை எழுத இயலாமல் இருந்ததால் எவரிடமும் கொடுக்க இயலவில்லை. எந்தை என்னைச் சாடியுள்ள பகுதிகளை நீக்கிவிட்டு இந்நூலை வெளியிடலாம் என என் உடன்பிறப்புகள், உறவுகள், கேண்மையர் வற்புறுத்தியும் நான் உடன்படவில்லை. ஏனெனில் அது தந்தைக்குச் செய்யும் இரண்டகம் எனவும், எழுதுவது அவர் உரிமை, அதில் கை வைக்க நமக்கேது உரிமை எனவும் கூறி நீக்க மறுத்து விட்டேன். இந்நூலைப் படிப்பார் அதனை உணர்வர். எனக்குச் சிறுமை வரினும் எந்தை எழுத்துக்குப் பெருமையெனில் அது எனக்குந்தானே. இந்நிலையில் திரு.இளவழகன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு முடியரசனார் படைப்புகள் முழுமையும் ஒருசேர பதிப்பிக்க விழைவதாகவும் நூல்கள் அனைத்தையும் தொகுத்துத் தரும்படியும் வேண்டினார். அவர் மொழி, இனம், நாடு எனும் குறிக்கோளை முன்னிறுத்திப் பெருந்தமிழ்ச் சான்றோர்களின் அரிய தமிழ்க் கருவூலங்களைப் பதிப்பித்துத் தமிழ் மண்ணுக்களித்து வரும் மொழிக் காவலர் என்பதாலும், தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடே (1999) முடியரசன்