பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 பயன்படுத்திக்கொண்டு, பேராயக் கட்சியினர். பொதுவுடைமையர் தலைமையாசிரியர்க்கு உதவி புரிவதாகக் கூறிக் கொண்டு, பள்ளிக்குள் நுழைந்து வீர நடை போட்டனர். மாணவர் உணர்ச்சி வேகத்தைக் கண்டு, என்ன நிகழுமோ? என்று அஞ்சிக் கொண்டிருந்த நான், தலைமை ஆசிரியர் ஆராவமுது ஐயங்காரை அழைத்து, இவர்களை வெளியேற்றுங்கள். இவர்கள் மாற்றுக் கட்சிக் காரர்கள். இவர்களைக் கண்டால் மாணவர் கொதித்தெழுவர். விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று விடும். உங்கள் ஒப்புதல் பெறாமல் எப்ப்டி உள்ளே நுழைத்தனர்? என்றேன். என்னை நன்கு புரிந்து கொண்டவராதலின் தலைமையாசிரியர், அவர்களை வெளியேற்றி விட்டார். நான் தலைமையாசிரியரை அழைத்துக் கொண்டு மாணவரி டையே சென்று சிலரை அழைத்து உள்ளே வரச் சொன்னேன். ‘என்ன ஐயா, இந்தி எதிர்க்கும் நீங்களே எங்களைத் தடுக்கிறீர்களே?" என்று உரிமைக்குரல் தந்தனர். நான் எதிர்ப்பது வேறு செய்தி: நான் ஆசிரியன்; உங்களைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. அங்கே காவலரைப் பாருங்கள் உங்களை அடித்துக் கை கால்களை முறித்து விட்டால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா? மேலும் நான்துண்டிவிட்டதாக என்மேற் பழி போடுவர். அதனால் வகுப்புக்குச் செல்லுங்கள். விருப்பமில்லை யென்றால் உங்கள் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளவிரும்பினால் வகுப்புச்செல்லாமல் ஒன்று கூடி விளையாட்டுத் திடலில் அமர்ந்து விடுங்கள் என்று கூறினேன். உடனே ஆயிரத்தின் மேலான மாணவர் அவ்வாறே வந்து அமர்ந்து விட்டனர். உரிமைக்குத் தடையா? நான் விடுமுறை நாள்களிலும் எனக்குரிய சிறு விடுப்பு நாள் களிலும் அருகிலுள்ள ஊருக்குச் சொற்பொழிவாற்றச் செல்வ துண்டு. தமிழண்ணலும் வருவார். இலக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வேன். அரசியல் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. மிதி வண்டியிற் சென்று தமிழுணர்வைப் பரப்பி வருவேன். அப்பொழு தெல்லாம் ரேட் கேட்கும் பழக்கமில்லை. எங்கள் பணியாகக் கருதிச் செய்து வந்தோம்.