பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 95 அவர் தலைமையாசிரியரிடம் மன்னிப்புக் கேட்டார். என்னிடம் கேட்டு என்ன பயன்? அவரிடம் கேளுங்கள் என்று சொல்ல என்னிடம் மன்னிப்புக் கேட்டார். மறப்போம் மன்னிப்போம்: என்ற அண்ணாவின் பொன்மொழிப்படி மறந்து விட்டேன். என்ன செய்யப் போகிறீர்கள்? கண்டனூரில் பழைய மாணவர் சங்கம் ஆண்டு விழாவிற்கு, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. தலைமை தாங்குகிறார் எனக் கூறி என்னைப் பேசவருமாறு அழைத்தனர். என்ன செய்யப்போகிறீர்கள்?" என்ற தலைப்பிற் பேச இசைந்தேன். விழாவிற்குச் சென்றேன். முத்தமிழ்க் காவலர் வரஇயலாமையால் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை யேற்றிருந்தார். முதலில் மெய்யப்பன் என்ற இளைஞர் பேசினார். பேசுங்கால் பாரதிதாசன் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். தமிழுணர்வு அவர் பேச்சில் தலைதூக்கி நின்றது. அவர் பேச்சிற்குக் கருத்துரை வழங்கிய அடிகளார். இளைஞர்கள் வழிதவறிச் செல்வதை, மெய்யப்பன் பேச்சு மெய்ப்பிக்கிறது. இவ்வாறு தடம் புரண்டு செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்னுங் கருத்துப்படப் பேசி முடித்தார். இவ்விளைஞர் தவறாக ஒன்றும் பேசி விடவில்லை. ஏன் அடிகளார் இவ்வாறு மொழிகின்றார் என நான் நினைந்து, நான் பேச எண்ணி வந்த கருத்தை மாற்றிக் கொண்டேன். தமிழ் நிலை குறித்துப் பேசத் தொடங்கினேன். மாணவ இளைஞர்களே! நம் தாய் மொழியின் தாழ் நிலையைப் பாருங்கள். இசையரங்கில் தமிழ்தனக்குரிய இடத்தைப் பெற்றுளதா? அரசு மன்றங்களில், கல்லூரி மன்றங்களில், நம் இல்லங்களிலே நிகழ்கின்ற திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலே தமிழ் தனக்குரிய இடத்தைப் பெற்றுளதா? நாம் வழிபடச் செல்கின்ற திருக்கோவில்களிலே - நம்நாட்டுக் கோவில்களிலே - நம்மால் எழுப்பப்பட்ட கோவில்களிலே - கசிந்து கண்ணிர்மல்கி, நெக்குருகித் தமிழால் வழிபடத்தான் முடியுமா?