பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 முப்பதுநாள் தமிழ்சொல்லிப் பள்ளிக் கூட முதல்வர்தரும் ஊதியத்தைக் கடனுக் கெல்லாம் ஒப்படைத்துப் பதினைந்து நாள்கள் ஒட்டி ஒழிந்த சின்னாள் என்செய்வேன் என்ற எண்ணம் கப்பிடநீ அருள்சுரந்துன் அன்னை தந்த காப்பளித்துக் காப்பளித்தாய்! அதுபோல் வானம் தப்பியதால் பெருக்கற்றும் ஊற்று நீரால் தரணியினைக் காக்கின்ற ஆறு காண்க என்ற பாடலைப்பாடினேன். ஒரு நாள், கானாடுகாத்தான் வை.சு. மஞ்சுளாபாய் அம்மை யார் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தார். என் மனைவியின் கோலத்தைப் பார்த்து விட்டுக் கண் கலங்கி, என்ன தம்பி பிள்ளையை இப்படி வைத்திருக்கிறாய்? காது, கழுத்து, கையிலே ஒன்றுமே இல்லையே! பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?’ என வருந்தினார். நகைகளை வைத்தா மதிப்பிடுகிறார்கள்? நடத்தையை வைத்துத்தானே எடை போட வேண்டும்? - என்று நான் கூறினேன். 'போ தம்பி; உனக்கு உலகமே தெரியவில்லை எனக் கூறி, இப்பொழுது கையில் எவ்வளவு இருக்கிறது?’ என வினவ, முப்பது உரூபா இருக்கிற தென்று விடை பகர்ந்தேன். அதைப் பெற்றுக் கொண்டு சென்ற அம்மையார் இருபத்தெட்டு உரூபாவுக்கு வாங்கிய தோட்டுடன் வந்து செல்வியின் காதுக்கு அணி செய்தார். இடையில் என்தாயும் தந்தையும் வாத நோயால் தாக்குண்டு, ஒன்பது ஆண்டுகள் படுக்கையிற் கிடந்தனர். ஒன்பதாண்டுகளும் அவர்களுக்கு வேண்டிய பணிவிடை அனைத்தும் என் மனைவி செய்து வந்தார். தவழுங் குழந்தைக்கு ஒரு தாய் செய்யும் அனைத்துப் பணிகளும் செய்து வந்தார். தற்கொண்டானைப் பேணுவதிற் குறைபாடிருப்பினும் மாமன், மாமியைப் பேணிக் காப்பதிற் கண்ணுங் கருத்துமாக இருப்பார். ஒரு நாள் கூட முகஞ்சுழிந்தது கிடையாது. தன்கடமையாகவே செய்து வந்தார். என் அன்னைக்கு வேண்டுவன செய்கிறாய்; சரி, தந்தைக்குச் செய்யும் போது உன் மனங் கூசவில்லையா? என்று வினவினேன். அவர் கூறிய மறுமொழி, என்னை மலைக்க வைத்து விட்டது. மூன்று குழந்தையோடு, இது நாலாவது குழந்தை' என்று நகைத்துக்