பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கவியரசர்முடியரசன் படைப்புகள்-10 எனத் தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியது எனக்கு முற்றும் பொருந்தும் உறவினர்எவரும்இல்லையே எனப்பலகால் ஏங்கியதுண்டு. நண்பர்கள் உறவினராகி என் ஏக்கத்தைக் களைந்து களைகண்ணாக நின்று காத்து வரும் அரணாக விளங்கி வருகின்றனர். இத்தோழர்கள் ஆற்றிய உதவிகளையெல்லாம் ஒய்ந்து கிடக்கும் என் உள்ளம் ஒரு நாள் நினைந்து நினைந்து உருகியது. உள்ளம் உருகிடின் பாடல் தானே உருவாகும்! அப்பாடல் இதோ: எனது வாழ்க்கை எழில்மலர்க் காவென மனத்தில் என்னவோ மற்றவர் எண்ணினர்; வண்ணமும் மணமும் வாரி இறைக்கும் எண்ணில் மலர்கள் நண்ணுபூங் காவென இலங்கிட வேண்டும் ஈதென் ஆவல். கலங்கிய மனத்தின் கற்பனைக்கனவிது: நீரே அறியா நிலமென் வாழ்க்கை யாரே அறிவார்? ஆகினும் உண்மை, காய்ந்தஅந் நிலத்திற் கண்கவர் சிலசெடி வாய்ந்ததும் உண்டு வண்ணமும் மணமும் தோய்ந்த மலர்கள் துளிர்த்ததும் உண்டு; நெருங்கிப் பழகியோர், நெஞ்சிற் பழுத்த பரிவும் அருளும் உரிமையுந் தாங்கி ஊற்றிய புனலால் தோற்றிய மலரவை: ஆற்றிய உதவியை ஆருயிர் உளவரை போற்றிப் போற்றிப் புகழ்த லன்றி ஏற்ற கைம்மாறு யானறியேனே! இவ்வாறு, பலருடனும் நட்புப் பூண்டு குடும்பத் தொடர்பு கொண்டிருந்தமையால் என்னை யாதவர் என ஒதுவர் சிலர். நாயுடு என நவில்வர் சிலர்: ஆசாரியார் என அறைவர் சிலர்: இசை வேளாளர் என இசைப்பர் சிலர்: முதலியார் முக்குலத்தோர் என மொழிவர் சிலர்; செட்டியார் ரெட்டியார் எனச் செப்புநரும் உண்டு. சாதியற்ற எனக்கு இத்தனைச் சாதியா?"