பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 கோட்டைக்கே புகழ்தேடித்தந்தவர். அவருடைய மணிவிழாவிற்குப் பாரதிதாசன் வருகிறார். அங்கே குழப்பம் நடந்தால் சுப்பிர மணியனார் மணிவிழாவில் குழப்பம் என்றுதானே செய்தி வரும். வந்தால், அண்ணலார் மனம் எவ்வளவு புண்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? நம் விழாவிற்கு வந்த கவிஞர் பெருமானுக்கு இப்படி யொரு நிலை நேர்ந்துவிட்டதே! என்று வருந்தி, விழாவிற்கு வர அண்ணலார் இசையமாட்டார். இந்த நிலை உருவாக வேண்டு மானால் உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளுங்கள் என்று கூறி நகர்ந்தேன். இதைக் கேட்டதும் தோழர்களுக்குச் சினம் ஆறியது. குழப்பமோ எதிர்ப்போ எதுவும் நிகழவில்லை. காலையில் பாவேந்தர் நீராடி ஆடையணிந்து விழாவிற்குப் புறப்படுமுன் தமது பெட்டியில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். ஐயா, என்ன தேடுகிறீர்கள்? என்றோம். கவிதை எழுதி வரச் சொன்னாங்க, அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்; காண வில்லை என்றார். எழுதிய கவிதையை வீட்டிலேயே போட்டு விட்டு வந்துவிட்டார் என்பது எங்களுக்குத் தெரியவே, ஐயா, கவிதையில்லையென்றாலும் குற்றமில்லை, உரைநடையாகவே பேசிவிடலாம் என்று கூறி அழைத்துச் சென்றோம். மணிவிழா நாயகர் அண்ணல் சுப்பிரமணியனாரை ஊர்வலமாக அழைத்து வந்தோம். ஊர்வலத்தில் நம் பாவேந்தர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பர நாதனார், முனைவர் மா. இராச மாணிக்கனார். முனைவர் சி. இலக்குவனார் போன்ற சான்றோர் புடைசூழ அண்ணலார் வந்தார். பாவேந்தர், பூவேலைப் பாடமைந்த செந்நிறச்சால்வையொன்றை அணிந்து அரியேறு போலப் பீடு நடையுடன் வந்த காட்சி, மணிவிழா நாயகர் பாவேந்தரா? சுப்பிர மணியனாரா? என்ற ஐயத்தை உண்டாக்கியது. கவியரங்க மேடையில் இருபுறமும் கவிஞர்கள் புடைசூழ நடுவில் பாவேந்தர் வீற்றிருந்த கோலம் பண்டைப் பாண்டி மன்னன் ஐம்பெருங்குழு எண்பேராயம் புடைசூழ வீற்றிருந்த திருவோலக்க மண்டபத்தை நினைவூட்டியது. அப்படியொரு கண்ணிறைந்த காட்சியாக இருந்தது. தலைமையுரையில் இலக்கணம் பற்றிய பேச்சே மிகுந்திருந்தது. யாப்பமைதியின்றிப் பாடுங் கவிதைகளைச் சாடினார். அவர் சாடும் பொழுது, குகையிலிருந்து வெளிவரும் அரியேற்றின் முழக்கம் போல இருந்தது.