பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 263 அடுத்த நிகழ்ச்சி தொடர்ந்தது. இந்நிகழ்ச்சிக்குச்செட்டிநாட்டரசர் முத்தையா செட்டியார் தலைமையேற்றார். நிகழ்ச்சி முடிந்தது. செட்டி நாட்டரசர் எழுமுன் பாவேந்தர், முத்தமிழ்க் காவலர் முதலானோர் வேகமாக மேடையேறினர். பாவேந்தர் தமது சால்வையை எடுத்து, இடையிற் கட்டிக் கொண்டு, பணிந்து நின்று பேசினார், மிடுக்கான பார்வையும் நிமிர்ந்த தோற்றமும் கொண்ட பாவேந்தர், இப்படிப்பணிந்து நின்று பேசியதை நான் கண்டதே இல்லை. யாரும் பார்த்திருக்கவும் இயலாது. பாவேந்தர் இவ்வளவு அடக்கவுணர்வுடன் என்னதான் சொல்கிறார் என்று நானும் அருகில் சென்று கேட்டேன். அப்பொழுது தேவநேயப் பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர்தம் மொழிக் கொள்கையில்மாறுபாடு கொண்ட சிலர் அவரைப் பணியிலிருந்து விலக்கிவிடச்சூழ்ச்சிகள் செய்தனர். செட்டி நாட்டரசர் அச்சூழ்ச்சிக்கு ஆட்பட்டுப் பாவாணரை விலக்கிவிடக் கூடாதே என்ற அச்சவுணர் வுடன் கூடிய இரக்கவுணர்வே அவ்வாறு பணிந்து நின்று பேசச் செய்தது. செட்டிநாட்டரசர் கூர்மதியாளர். பாவேந்தர் என்ற வில் வளைகிறது. நாம் விழிப்பாக இருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று கருதிப் பாவாணரைப் பணியிலிருந்து விலக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். பாவேந்தர் பூரிப்போடு மேடை விட்டு இறங்கினார். பாரதிதாசன் ஒரு பிறவிக் கவிஞர், அஞ்சாத் துணிவினர். பெரியார் தொண்டர். பொழுதெல்லாம் கற்பனையுலகில் பறந்து திரியும் வானம்பாடி. கனல் தெரிக்கப் பேசும் போர் மறவர், பெண்மையைப் போற்றும் பெட்பினர், தடைகளை மீறிப் படர்ந்து செல்லும் ஆற்று வெள்ளம், சூதுவாதறியாப் பச்சைக் குழந்தை, உலக நடை முறைகளுக்கு அப்பாற்பட்ட ஒளிக்கற்றை. இலக்கண மணிகள் நிறைத்து வைக்கப்பட்ட பொற்பேழை, வேகந்தடுத் தாளும் வித்தகர், பெருமிதங்குன்றாப் பீடு நடையார், பிறர் நலங்காக்கப் பணிந்துபோகும் பெற்றியர், பாட்டுச் சுரக்கும் வற்றா ஊற்று - என்று இன்னோரன்ன இயல்புகளை, அவருடன் தொடர்பு கொண்ட சில நிகழ்ச்சிகளால் நான் தெரிந்து கொண்டேன்.