பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 வெற்றுடம்புடன் கூட்டத்தில் நிற்கக் கூச்சப்படுவேன். சிற்பச் சிறப்புடைய கோவிலைக் காண நண்பர்களுடன் செல்லுங்கால், சட்டை கழற்ற வேண்டுமென்று எவரும் கூறினால், நான் மட்டும் வெளியில் நின்றுவிடுவேன். கூச்சந்தான் காரணம். சிறுபிள்ளை முதல் இப்படியே பழக்கப்பட்டவன் நான். அதனால் அரங்கினின்று வெளியேறிவிட்டேன். புலவர் அன்பு கருணையானந்தர் என்னைத் தொடர்ந்து வந்து அமைதி கூறி உள்ளே வருமாறு அழைத்தார். நான் இசைந்திலேன். அவரும் விடவில்லை. கெஞ்சிக் கெஞ்சி என்னை உடம்படுத்தி விட்டார். அவர் தோளில் இருந்த பெரியகதர்த்துண்டைத் தந்து, 'இதைக் கட்டிக் கொண்டாவது வாருங்கள் என்று கெஞ்சியதும், அதை வாங்கி நீராடச் செல்லும் மகளிர்கட்டிக் கொள்வது போலக் கட்டிக் கொண்டு சென்று பாடினேன். அடிகளார்.அகம் மகிழ்ந்தார். அரங்கிற்பாடிய மூவரும் மனம் விட்டுப்பாராட்டினர். அப்பாடல்கள் 'இயற்கைத்தாய்' என்ற தலைப்பில் என் கவிதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளன. இத்தலைப்பில் வரும் தென்றல் எனும் தொட்டி லிலே என்னும் பாடல் சாகித்திய அக்காதமியால் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. முருகப்பர் தூண்டியிராவிடின், ‘இயற்கைத்தாய் தோன்றியிராள். வெண்தாடி வேந்தர் காரைக்குடிக் கம்பன் திருநாளில் ஆடவர் என்னுந் தலைப்பிற் பாடினேன். கம்பனும் நானும் கற்பனை உலகிற் பறந்து செல்வது போலவும் கம்பன் ஒவ்வோராடவனையும் காட்டி, விளக்கந் தருவது போலவும் பாடி இருந்தேன். கம்பன் திருநாட் கவியரங்கில் என் கருத்தை எப்படியாவது குறிப்பால் உணர்த்துவது வழக்கம். தொடக்கத்திலேயே கம்பனை நோக்கி, நான், அந்த 'வெண்தாடி வேந்தர் யார்?' என்று வினவக் கம்பன், தயரதன்தான் என்று விடை கூறினான். அரங்கிற்கருகில் அமர்ந்திருந்த. கி.வா. சகன்னாதன் அவர்கள் தயரதனுக்கு வெண்தாடி இல்லையே' என்றார். அதற்கு நான் ஈண்டு வெண்தாடியெனக் குறிப்பிட்டது நிறத்தையன்று; முதுமையைச் சுட்டிற்றென்க - என விடை கூறினேன்.