பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப்பறவையின் வாழ்க்கைப்பயணம் 277 நானெழுந்து, “முடியரசன் மிரண்டதாக வரலாறே இல்லையே” என்றேன். அப்பொழுதும் அவர் அடங்கவில்லை. முடிப்புரையில் இதற்கெல்லாம் விடை பகர்வோம் எனக் கருதி, மேலொன்றும் பேசாமலிருந்து விட்டேன். அவர் மேலும் பேசிக் கொண்டிருந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் வீரப்பன் அவர்கள் ஒருவரையனுப்பி தலைவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் பாடு வதானால் பாடுங்கள் இல்லையென்றால் அமருங்கள்’ எனச் சொன்ன பின்னரே அவர் தலைப்புக்கு வந்தார். அரங்க நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த காவற்றுறைத் தலைவரே வருந்தினார். என்னங்க அவர் இப்படி நடந்து கொண்டார்: நீங்கள் சொல்லியும் கேளாமல் நடந்து கொண்டது விரசமாக இருந்தது' என்று கூறினார். என் செய்வது? விழாவில் அண்ணாவின் பெயர் மட்டும் பயன் பட்டதே தவிர அவர் கூறிய கட்டுப்பாடும் கண்ணியமும் காணப் படவில்லை. இறுதியில் புலமைப்பித்தன் பாடினார். அவர்தம் பாடல்கள் உள்ளத்தைத் தொட்டுவிட்டன. உணர்ச்சிப் பெருக்கைத் துண்டி விட்டன. அவர் பாடி முடித்ததும் அவையோர் கண் கலங்கி விட்டனர். நான் அழுதேவிட்டேன். முடிப்புரை சொல்ல எழுந்த எனக்கு நாவே எழவில்லை. உணர்ச்சி வயப்பட்டு இதுதான் கவிதை என்று மட்டுங் கூறி அமர்ந்துவிட்டேன். - ஐந் தாண்டுப் பருவத்தனாகிய என் இளைய மகன் என்னை விட்டு மறைந்தான். அண்ணா நம்மைவிட்டுப் பிரிந்தார். என் உள்ளங் கவர்ந்த இருவரையும் இன்றும் நினைந்து உருகி விடுகிறேன். இக்கவியரங்க நிகழ்ச்சியால், என் கவிதைக்கும் எனக்கும் கிடைக்க வேண்டிய பல சிறப்புகள் தடுக்கப்பட்டன. சிறப்புப் பெரிதா? கொள்கை பெரிதா? கொள்கையிழந்து சிறப்புப் பெறுவது எனக்குச் சிறுமையாகத்தான் தோன்றுகிறது. அடிகளார் அழுதார் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஆண்டு தோறும் கலைவிழா மிகச் சிறந்த முறையில் நிகழ்வுறும். கவியரங்கமும் நிகழும்.