பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 அன்னாய் என்னுயிர் அன்னாய் என்கோ? தந்தாய் என்னுயிர் தந்தாய் என்கோ? என்கோ என்கோ - என்ற அடிகளை அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. என்னை முற்றுகையிட்டு வரும் பற்றாக்குறை, இன்று அப்பெருந் தகையையும் சுற்றிவருகிறது. இந்நிலையிலும் திங்கள் தோறும் திருக்குறட் கழக நிகழ்ச்சிகளை நடத்த இயலவில்லையே! புலவர் களுக்கு உதவ இயலவில்லையே' என ஏங்குகிறார். ஒரு முறை எனக்கு மடல் எழுதியிருந்தார். அம்மடலில், தங்களைப் போன்ற புலவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லையே! இத்தகைய வாழ்வும் எனக்குத் தேவைதானா?” என்று வாழ்வையே வெறுத்து எழுதியிருந்தார். மடல் தோறும் நாடு, மொழி, இளைஞர் உலகம் சீர் கெட்டு விட்டனவே என வருந்தி வருந்தி எழுதுவார். ஆரவாரத் தன்மை வாய்ந்த இவ்வுலகில், ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோராக வாழும் இப் பெருந்தகையின் அளியைப் பெற யான் என்ன பேறு பெற்றேனோ என நினைந்து நினைந்து பூரிக்கின்றேன். அடிகளார் கிறித்து சமயப் பெருந்தகையாகிய வேதநாயகம் பிள்ளை, சைவத் திருமடமங்கட்குச் செல்வதையும்திருமடத்தில் உள்ள தலைவர்கள் இவரிடம் அன்பு செலுத்துவதையும் பயிலுங்கால், நான் பெரு வியப்படைவதுண்டு, வேறுபட்ட சமயத்தினர் பகைமை கருதாது, அன்பும் நண்பும் பூண்டொழுகி வருகின்றனரே! இஃது எவ்வாறு இயல்கின்றது? என அடிக்கடி எண்ணுவதுண்டு. அவர்கள் சந்திக்கும் பொழுது, இருவரிடையேயும் சமயம் என்ற சிறிய திரை விலகி விடுகிறது. மாந்தநேயம் என்னும் பேருணர்வு தோன்றி விடுகிறது. மேலும் அவ்விருவரும் சமயத்தால் வேறு படினும் தமிழினத்தவர்தாமே தமிழுணர்வு இருவரையும் ஒன்றுபடுத்தி விடுகிறது-என்று எனக்கு நானே விடை தந்து அமைதி கொள்ளுவேன்.