பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 பயிலும் பூவை பிறப்பு முகில் தவழும் முகடுகளையுடைய மேற்குத் தொடர்ச்சி மலை மேற்றிசையில் அரண் செய்யும்; பனிப்படலம் தவழ்ந்து விளையாடும் கோடைக்கானல் மலை வடதிசையில் அணி செய்யும்; வெற்றிலைக் குன்றுக்கு (வத்தலக்குண்டுக்கு)ச் செல்லும் சாலை கீழ்த்திசையிலும் தேனி, கம்பம், கூடலூர் செல்லும் சாலை தென்றிசையிலும் அமைந்துகிடக்கும் இந்நான்கெல்லைகட்கு நடுவில் அமைந்த நகர்தான் பெரியகுளம் என்னும் ஊர். இது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. ஊருக்கு நடுவில் வராக நதி என்னும் பெயர் கொண்ட ஒரு சிற்றாறு ஒடும். அவ்வாற்றின் வடதிசையில் அமைந்த குடியிருப்பு வடகரை என்றும் தென்றிசையில் அமைந்த குடியிருப்பு தென்கரை என்றும் அழைக்கப்படும். தென்கரையில் வாணக்காரப் பிள்ளைத் தெருவில் சிறிய ஒட்டு வீட்டில் நாச்சியார் அம்மாள் என்னும் மூதாட்டி வாழ்ந்து வந்தார். அவருக்குத் துரைசாமி என்ற மகனும் சீதாலட்சுமி என்ற மகளும் இருந்தனர். நாச்சியார் அம்மாள் எளிய குடும்பத்தைச் சேர்ந்த வராயினும் மக்களைச் சீருடனும் சிறப்புடனும் வளர்த்து வந்தார். அண்ணன், தங்கையிடம் அளவிலா அன்பு செலுத்தி வந்தார். உரிய பருவத்தில் சீதாலட்சுமிக்கும் திண்டுக்கல் சுப்புராயலு என்பவர்க்கும் திருமணம் நடந்தேறியது. -- சீதாலட்சுமி நான்கு மக்களை ஈன்றெடுத்தும் ஒன்று கூட இம் மண்ணுலக வாழ்வை விரும்பவில்லை. பிறந்தவுடன் விடை