பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் Fਨੁਕੂ | காட்டி என் தங்கை மகன்; நல்ல அறிவாளி என்று அறிமுகம் செய்து வைப்பார். இச்சூழல், எப்படியோ என்னுள்ளத்தில் கவிதையின்பத்தை வளர்த்து விட்டது. சுருங்கக் கூறின் கவிதையுணர்வு என்ற வேல், எனக்கு என் பிள்ளைமைப் பருவத்திலேயே என் தாய் மாமனால் வழங்கப்பட்டது எனலாம். மேலும் என் அன்னையார்தமது இனியகுரலிற்பாடும் தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு உருகியிருக்கிறேன். அடிக்கடி பக்கத்து விட்டுப் பெண்களைக் கூட்டி, அல்லி அரசாணி மாலை, புலந்திரன் களவு மாலை, பஞ்சபாண்டவர் வனவாசம், பவளக்கொடி போன்ற பாடல்நூல்களையும் விக்கிரமாதித்தன் கதை போன்ற நூல்களையும் பாடிக் காட்டி, படித்துக்காட்டி மகிழ்வார். அருகிலிருந்து நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். மதுரைக்குச் செல்ல நேர்ந்தால் புது மண்டபத்துக்குச் சென்று புத்தகம் வாங்குவதுதான் அவர் வேலை. சாதி மதங்கள் எங்கள் வீட்டைச் சுற்றிலும் வாணியர் தெரு, மறவர் தெரு, இசுலாமியர் தெரு சூழ்ந்திருக்கும். மூன்று தெருவினரும் எங்களுடன் நெருங்கிப்பழகுவர். அண்ணன், தங்கை, மாமன், மச்சான் என்று உறவு கூறிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள். என் பாட்டியின் பரிவும் என் மாமனின் நல்லொழுக்கமும் அறிவும் அவர்களையெல்லாம் உறவாக்கி விட்டன. என் பாட்டி காலத்தில் தொடங்கிய அவ்வுறவு மூன்றாந்தலைமுறையைச் சேர்ந்த என் காலத்திலும் இன்றும் நிலவி வருகிறது. இன்று வரை எவ்வகையான வேறுபாட்டுணர்வையும் நான் கண்டதில்லை. இவ்வாறு பழகிய பழக்கந்தான், பிற்காலத்தில் என் உள்ளத்தில் சாதியுணர்வோ மதவுணர்வோ வேரூன்றாமைக்குக் காரணமாயிற்று எனலாம். அன்று கண்ட ஒன்றிப் பழகும் உறவுணர்வை இன்று நாட்டிலே காண முடியவில்லையே! எங்கோ அரிதாகக் காணப்படுகிறதே தவிரப் பெரும்பாலும் காண இயலவில்லை. காரணம் தம்மையே நினையும் நினைவு வளர்ந்து, செழித்துப் படர்ந்து விட்டதுதான் என்று கூறலாம். பிறர் நலம் பேணும் பெற்றிமை குறைந்து, தம் நலம் காக்கும் குறுவட்டத்திற் சிக்கிக் கொண்டது மாந்தரினம்; பண்பாட்டுத் தலைவரும் அருகினர். போலிமை, வெளி வேடம் கவர்ச்சி இவை