பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 தலைதுாக்கி நிற்கின்றன. நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால் என்று நல்லோர் நெஞ்சங்கள் குருதி நீர் சிந்துகின்றன. யானையும் நானும் நான் ஐந்தாறு அகவை வரை, யானையைக் கண்டதில்லை. ஒருமுறை போடிநாயக்கனுாருக்குச் சென்றிருந்த பொழுது, கடைத் தெருவுக்குச் சென்று திரும்பினேன். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற் கருகில் வந்து விட்டேன். எதிரில் யானையொன்று வருவதைத் திடீரென்று பார்த்தவுடன் அப்பேருருவம் என்னை அலறியடித்துக் கொண்டு ஓடச் செய்து விட்டது. அன்று பதிந்து விட்ட அச்சம் இன்றுவரை அகலவில்லை. யானைக்கருகில் இப்பொழுதும் செல்வதில்லை. பெரியகுளத்து ஆற்றில் அடிக்கடி யானையை நீராட்டுவார்கள். யானை ஆற்றின் நடுவில் அழகாகப் படுத்துக் கொண்டு, தன் துதிக்கையால் நீரெடுத்துத் தன்மேல் இறைத்துக் கொண்டிருக்கும். சிறுவர்கள் யானை மீதேறி விளையாடுவர். கரையில் நின்றவாறே அக்காட்சியைக் கண்டு மகிழ்வேனேயன்றி ஒருநாளும் அருகிற் சென்றதில்லை. திண்ணைப்பள்ளி பின்னர் என் பெற்றோர் பிழைப்பின் பொருட்டுச் செட்டி நாட்டில் வேந்தன் பட்டி என்ற ஊருக்கு வந்து விட்டனர். வேந்தன் பட்டிக்கு வடபால் ஒர் ஊருணி உண்டு. அதையடுத்த பகுதிக்கு மேலைச்சிவபுரி என்று பெயர். வேந்தன்பட்டியில் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் முதல் வகுப்பில் மீண்டும் சேர்க்கப்பட்டேன். அதன் ஆசிரியராக இருந்து நடத்தி வந்தவர் வேங்கட ராமையர். ஆசிரியன் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். இடையில் ஒரு கதராடை, தோளில் ஒருதுண்டு; (அது பெரும்பாலும் நாற்காலியில்) மார்பில் தடித்த பூணுால், உச்சியில் சிறு குடுமி, வலக்கையில் இரு விரல்களுக் கிடையே பொடி, விரைந்த நடை, உயர்ந்த உருவம்; மாணவர்களை உருவாக்கும் அக்கறை இவையனைத்தும் சேர்ந்த மொத்தவுருவமே வேங்கட ராமையர். இவரிடந்தான் மண்ணில் விரலால் எழுதும் பயிற்சி பெற்றேன்; எண் சுவடி, கீழ்வாயிலக்கம் கற்றுக் கொண்டேன். o