பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 இருக்கத்தான் செய்கிறது. எனினும் அடக்கவுணர்வு நிலைபெற்றுள்ள மைக்குக் கழிபேருவகை கொள்கின்றேன். பிரவேச பண்டிதம் மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வுக்காகப் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்ற வகுப்புகளைச் சன்மார்க்க சபையார் நடத்தி வந்தனர். பயிலும் மாணவர்க்கு உண்டியும் உறையுளும் அவர்களே வழங்கி வந்தனர். தம் கைப் பொருளை வழங்கி இக்கல்விப்பணி செய்து வந்தனர். நான் ஆறாம் வகுப்பில் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். அதற்காக ஆறுமுக நாவலர் நன்னூற்காண்டிகையுரை பரிசிலாகவும் பெற்றேன். இதனையறிந்த மு. அருணாசலனார். உங்கள் பையனுக்குத் தமிழ் நன்றாக வருகிறது. அவனைத் தமிழ்க் கல்வியிற் சேர்த்து விடுங்கள் என்று என் தந்தையாரிடம் கூற, அவரும் இசைந்து, என்னைப் பிரவேசபண்டித வகுப்பிற் சேர்த்து விட்டார். அப்பொழுது என் அகவை பதினான்கு. நான்காண்டுகள் பயின்றேன். அவ்வகுப்பிற் பெற்ற தமிழறிவுதான் என்னையும் ஒரு புலவனாக மிளிரச் செய்தது. என் வணக்கத்திற்குரிய ஆசிரியப் பெருந்தகை மீ முத்துசாமிப்புலவர் இலக்கண இலக்கியங்களைத் திரும்பத்திரும்பக் கற்பித்து, நன்கு விளங்க வைத்து என் மனத்திற் பதிய வைத்தார். இச்சபை, பண்டிதமணி. மு. கதிரேசனார் கண்காணிப்பில் இயங்கி வந்தது. அதனால் ஆண்டு தவறாமல் நிகழும் ஆண்டு விழாக்களில் அன்று வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் அனைவரும் வருகை தந்து சொற்பொழிவாற்றுவர். அச்சொற்பொழிவுகளை யெல்லாம் விடாது கூர்ந்து கேட்டுச் சுவைப்பேன். வருகை தந்த பண்டிதமணி கதிரேசனார், இரா. இராகவையங் கார் விபுலாநந்த அடிகள், தமிழவேள் உமாமகேசுரனார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை போன்ற சான்றோர்க்கு வேண்டிய பணிவிடைகள் செய்து மகிழ்வேன். அவர்கள் தனித்திருக்கும் பொழுது, அவர்கள் சொல்வதெல்லாம் கேட்டு மனத்திற் பதித்துக் கொள்வேன். விபுலானந்தர், கவியரசு இவர்கள் காட்டிய அன்பு இன்றும் பசுமையாக இருக்கிறது. ஆண்டு தோறும் இப்பெரு மக்கள் சொற்பொழிவுகளைக் கூர்ந்து கேட்டது, என் தமிழறிவிற்கு நல்லுரமாக அமைந்தது.