பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 திகாரவுரைகளிலும் சங்க இலக்கியவுரைகளிலும் சாதிவேற்றுமைகள் மலிந்து காணப்பட்டன. அதிலும் உரையாசிரியர் நச்சினார்க் கினியர் உரையென்றால் சொல்ல வேண்டுவதில்லை. வலிந்து சாதிப் பாகுபாடுகளைப் புகுத்தி எழுதுவார். இவற்றை யெல்லாம் பாடங் கேட்கும் பொழுது என் மனம் புழுங்கும். அதனால் அவற்றில் வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. திரைப்பட வெறி, தன்மான இயக்க வெறி, உரையாசிரியர்களால் புராணங்களால் ஏற்பட்ட வெறுப்பு அனைத்துங் கூடி என் படிப் பார்வத்தைச் சிதைத்து விட்டன. படிப்பில் நாட்டமின்றித் திரிந்த என்னை ஆசிரியர் பெற்றோர்,நண்பர் அனைவரும் கண்டித்தும் கடிந்தும் பேசினர். என் எதிர்கால வாழ்வு கருதி அவர்கள் கழறியன எனக்குக்கைப்பாகவே இருந்தன. கைப்பினும் அவற்றை மனத்துள் ஏற்றுக் கொண்டு பயிலத் தொடங்கினேன். தீபாவளி கொண்டாடுவதும் அதை யொட்டிக் கவுரிவிரதம்' என்ற நோன்பு எடுப்பதும் எங்கள் வீட்டு வழக்கம். 1941 ஆம் ஆண்டு நான் தீபாவளி கொண்டாடவும் நோன்புக்கயிறு கட்டிக் கொள்ளவும் மறுத்துவிட்டேன். என்தாய்தடுத்தும்.அக்கொள்கையில் உறுதியுடன் நின்றேன். அடுத்த ஆண்டு வந்தது; என் அன்னை புதுத்துணிகள் எடுக்கச் சொன்னார். நம்ம பையனே மாட்டேங் கிறான்; நமக்கு மட்டும் தீபாவளி ஏன்? என்று என்தந்தை கூறி விட்டு விட்டார். என் அன்னையும் தீபாவளியை விடுத்து, நோன்பு மட்டுங் கொண்டாடினார். அதற்கடுத்த ஆண்டு அதுவும் தானே போயிற்று. என் தன்மான இயக்கவுணர்வுக்குக் கிடைத்த முதல் வெற்றி! சீரங்கநாதனும் தில்லை நடராசனும் தமிழர் திருநாளை முன்னிட்டு, மாணவர்கள் ஒன்று கூடி, வெளியிடத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, என்னைத் தலைமையேற்கச் செய்தனர். மாணவர் பலர் பேசினர். பேராயக் கட்சியைச் சார்ந்த தி.பொ. நாராயணசாமி பாரதி யென்பார் பேசும் பொழுது, ஒருவன் வளமனையில் வாழ்வது கண்டு பொறாமை கொள்வது தவறு. ஓரினம் நன்றாக வாழ்கிறது என்றால் அதுபோல நாமும் வளர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டுமே தவிர, அந்த இனத்தைக் கண்டு பொறாமைப்படுவதும் திட்டுவதும் குற்றமாகும் என இனவுணர்வு கொள்வதைச் சாடினார்.