பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 59 நாடோறும் செயலரைச் சென்றடையும். தலைமையாசிரியரிடமும் முறையிடுவார். தலைமையாசிரியர் என்னிடம் கூறுவார். நான் மாணவர்களைக் கண்டிப்பேன். 'வடமொழியாசிரியரும் தமிழ் நாட்டுக்காரர்தானே? தமிழைக் கண்டால் ஏன் வெறுக்கிறார்? நாங்கள் எழுதத்தான் செய்வோம்' என்று மாணவர் எழுச்சி கொள்வர். தம்பிகளே! நீங்கள் சொல்வது சரிதான். தமிழ்நாட்டுக்காரன்தான்தமிழுக்குப் பகையாக இருக்கிறான்! என் செய்வது? நீங்கள் அப்படி யெழுதினால் நான்தான் துண்டி விடுகிறேன் என்று கருதுவர். எனக்கு அப்படி யொரு கெட்டபெயர் வரவேண்டும் என்று விரும்பினால் எழுதுங்கள் என்று சொன்னேன். வடமொழி மாணவர் அனைவரும் இனி எழுத மாட்டோம் என்று உறுதி கூறினர். அவ்வாறே நடந்துங் காட்டினர்.' மாணவர் அன்பு முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப்பள்ளியிலிருந்த தம்பு செட்டித் தெருவில் ஆர்.எஸ்.எஸ். சங்கமும் கூடுவதுண்டு. என் மாணவர் சிலர் அங்கே செல்வதுண்டு. என்னைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்திருக்கிறது. அம்மாணவர் என்னிடம் வந்து, ஐயா, உங்கள் தலையை எடுத்து விடுவதாக ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கூறுகிறார்கள் என்று முறையிடுவர். காந்தியைக் கொன்றவர்களுக்கு என் தலையை எடுப்பது எளிது தானப்பா; அதனால் எனக்குப் பெருமைதான்; நீங்கள் கவலைப் பட வேண்டாம் என்று ஆறுதல் கூறுவேன். நாங்களும் உறுப்பினர்கள் தான்; ஒரு நாளும் அப்படி நடக்க விட மாட்டோம்” என்று உணர்ச்சிவயப்பட்டுக் கூறினர். கூறியோர் பார்ப்பன மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு இறுதியில் வகுப்புகள் தோறும் மாணவர்கள் ஆசிரியர் களுக்கு விருந்தளித்துத் தம் நன்றியைப் புலப்படுத்திக் கொள்வது வழக்கம். இரண்டாம் ஆண்டிறுதியில் நடந்த அந்நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். புலவர் தா. அழகு வேலன் உரையாற்றும் பொழுது 'முடியரசன் அடுத்த ஆண்டு உங்களுக்கு ஆசிரியராக இருக்க மாட்டார். விலகிச் செல்ல முடிவு செய்துள்ளார் என்று கூறி அழுது விட்டார். மாணவர்கள் கண் கலங்கி விட்டனர்.