பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 73 யாகப் பழகும் இயல்புடையவர்” என்று கூறிவிட்டுக் கடவுள்கள் கற்பனை யென்று தத்துவ முறைப்படி விளக்கிக் கூறினார். பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியாரைப் பற்றிப் பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரணதுரைக்கண்ணன் பேசினார். அதன் சுருக்கம்; முதலியார், இளமையில் வறுமை நிலையில் வாழ்ந்தவர். அச்சுக் கோக்கும் தொழில் பார்த்து வந்தார். இத் தொழிலில் இருந்து கொண்டே தமது அயரா உழைப்பால், புலவராகவும் செல்வராகவும் உயர்ந்தார். தமிழ்ப் புலவரொருவர் செல்வராகவும் பலவீடுகளுக்கு உரிமையாளராகவும் ஊர்தியுடையவராகவும் விளங்கியமை பெரும் வியப்பிற்கும் பாராட்டுக்கும் உரியது. அவர்தம் இல்லங்களுக்கு நெய்தலகம்', 'கடலகம்', 'காவேரி" எனப் பெயர்கள் வைத்திருந்தார். நீலகிரியிலும் ஒரு வளமனை இருந்தது. இப் பெருமகனார்க்கு நினைவுச்சின்னம் எழுப்புவது நம் கடமையாகும். அவ்வாறு செய்யின் தமிழர் சமுதாயத்திற்கே நன்மை தரும் என்று கூறினார். தமிழவேள் உமாமகேசுரனாரைக் குறித்துச் சக்கரபாணி நாயகர் என்பார் உரையாற்றினார். உண்மைகளை அப்படியே எடுத்து மொழிவதில் அஞ்சாமையுடையவராக இருந்தார். அவர் குறிப் பிட்டவை: தமிழவேள் பார்ப்பனரை வெறுப்பவர். மொழி, நாடு இவற்றின் முன்னேற்றத்தைத் தடுப்போர் பார்ப்பனர். இவர்களைக் குறும்பர் கூட்டம் என்று குறிப்பிடுவார். அவர்களை எதிர்த்து அடக்குவதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பார். பார்ப்பனர் செயல்களை வெறுக்கும் இயல்புடையராயினும்தமிழுக்குத் தொண்டு செய்தோரைப் போற்றுவார். டாக்டர் உ.வே.சாமி நாத ஐயர் போன்ற பெருமக்களைப் பாராட்டத் தவறார்." வடநாட்டில் காந்தியடிகள் எவ்வாறு வழக்கறிஞர் தொழில் நடத்தினாரோ அவ்வாறே தென்னாட்டில் தமிழவேள் அத்தொழிலை நடத்தினார். தமிழுக்காக உண்மையில் பாடுபட்ட பெரியோர்களில் தமிழவேளும் ஒருவர் எனக்குறிப்பிட்டார்.