பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோழரும் சளுக்கியரும்

11

இவற்றையெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, சோழகுலத்தினர் நம்மனோரால் ஆராய்ந்து அளந்து காணமுடியாத அத்துணைப் பழங்காலமுதல் நம் தமிழ்நாட்டின் கீழ்ப்பகுதியாகிய சோழவளநாட்டில் வீற்றிருந்து, அதனைச் சிறப்புடன் ஆண்டுவந்த அரச குலத்தினர் ஆவர் என்பது நன்கு விளங்குதல் காண்க.

இனிச் சளுக்கியர் என்பார், வடநாட்டினின்றும் போந்து, பம்பாய் மாகாணத்தின் தென்பகுதியிலுள்ள இரட்டபாடி நாட்டை, வாதாபிநகரம்,[1] மானியகேடம், கலியாணபுரம் முதலான நகரங்களில் வீற்றிருந்து அரசு புரிந்துவந்த ஓர் அரசகுலத்தினர் ஆவர். சீன தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த வழிப்போக்கனாகிய யுவான் சுவாங் என்ற ஆசிரியன், சளுக்கியரது போர்வன்மையைத் தன் நூலுட் புகழ்ந்திருத்தலோடு வடவேந்தனாகிய ஹர்ஷவர்த்தனனைத் தென்னாட்டிற்குச் செல்லாதவாறு போர்புரிந்து விலக்கிய இரண்டாம் புலிகேசி என்பவன் இச்சளுக்கிய குலத்தில் தோன்றிய மன்னன் என்று பாராட்டிக் கூறியுள்ளான்.[2]

இரண்டாம் புலிகேசியின் தம்பியாகிய குப்ஜ விஷ்ணு வர்த்தனன் என்பான் கிருஷ்ணை, கோதாவரி என்ற இருபேராறுகளுக்கும் இடையிலுள்ள வேங்கி நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக் கீழைச்சளுக்கிய நாடொன்றை அமைத்தான்.[3]


  1. 10. The Mcdern Badami in the Bijapur District.
  2. 11.Mysore Gazetteer Volume II Part II pages 708, 709 & 710
  3. 12. Mysore Gazetteer Volume II, Part II pages 707 & 708.