பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

முதற் குலோத்துங்க சோழன்

அவனைத் 'தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்' என்று புகழ்ந்து கூறுகின்றன.[1]

பாரதப்போர் நிகழ்ந்த நாட்களில் ஒரு சோழ மன்னன் போர்முடியும் வரையில் தருமன் படைக்கு உணவளித்து உதவிபுரிந்தனன் என்று கலிங்கத்துப் பரணியுரைக்கின்றது.[2]

ஆகவே, இராமாயண பாரத காலங்களிலும் அவற்றிற்கு முந்தியநாட்களிலும் சோழகுலத்தினர் மிகச் சிறப்புற்று விளங்கினர் என்பது இனிதுணரப்படுகின்றது.

கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், மகதநாட்டில் செங்கோல் செலுத்திய அசோகனது ஆணையை யுணர்த்துங் கல்வெட்டுக்களிலும் சோழரைப்பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கி பி. முதல் நூற்றாண்டில், மேனாட்டினின்றும் தமிழ்நாடுபோந்த யவன ஆசிரியனாகிய தாலமி என்பானது வரலாற்றுக் குறிப்பிலும், மேனாட்டு வரலாற்று ஆசிரியன் ஒருவனால், அப்பழைய காலத்தில் எழுதப்பெற்ற 'பெரிப்ளஸ்' என்ற நூலிலும் சோழரைப்பற்றிய உயரிய செய்திகள் காணப்படுகின்றன. எனவே, கிரேக்கரும் உரோமரும் மிக உயர்நிலையிலிருந்த நாட்களில் நம் சோழரும் அன்னாருடன் வாணிபத் தொடர்புடையராய்ப் பெருமையோடு வாழ்ந்துவந்தனர் என்பது பெறப் படுகின்றது.


  1. 8. புறநானூறு 39. 'உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை' -- சிலப்பதிகாரம்-வாழ்த்துக்காதை.
  2. 9. கலிங்கத்துப்பரணி 181.