பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோழரும் சளுக்கியரும்

17

கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமழபாடி என்னுந் தலத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலம் என்ற நகரம் இவர் அமைத்ததே யாகும். இவரது மனைவியாராகிய செம்பியன்மாதேவியாரது சிவபத்தியும் அளவிட்டுரைக்கும் தரத்ததன்று. இவ்வம்மையார் திருப்பணி புரிந்து நிபந்தங்கள் அமைத்துள்ள சிவன் கோயில்கள் நம் தமிழகத்தில் பல உள்ளன.[1] கண்டராதித்த சோழரது படிமம். இவரது மனைவியாரால் கட்டுவிக்கப்பெற்ற கோனேரி ராசபுரம் சிவன்கோயிலில் இன்றும் உளது.

இவ்வரசருக்குப் பின்னர் இவரது தம்பியாகிய அரிஞ்சயன் என்பான் சில மாதங்கள் ஆண்டனன். பிறகு இவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தகன் கி. பி. 957-முதல் கி. பி. 970-வரை அரசு செலுத்தினான். இவனைச் சுந்தரசோழன் என்றும் வழங்குவர். அன்றியும், இவனைப் 'பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள்' என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இவனது மனைவி வானவன் மாதேவி என்பாள்.[2]இவ்வரசனுடைய


  1. 9. திருவாரூர் அரனெறி, செம்பியன் மாதேவி (நாகபட்டினம் தாலூகா), தென்குரங்காடுதுறை (S. I. I. Vol. III. No.144.) திருநல்லம் (கோனேரிராஜபுரம் S. I. I. Vol. III. No.146, 147 and 151); திருமணஞ்சேரி; விருத்தாசலம்.
  2. 0. சுந்தர சோழனது பட்டத்தரசியாகிய வானவன் மாதேவி தன் நாயகன் இறந்தபோது உடன்கட்டை ஏறினாள் என்றும் அதுபோது அவ்வம்மைக்கு ஓர் இளங்குழந்தை யிருந்ததென்றும் திருக்கோவலூரிலுள்ள முதல் இராச ராசன் கல்வெட்டு உணர்த்துகின்றது. (செந்தமிழ் - தொகுதி 4 பக். 232.)

மு. கு. 2