பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

முதற் குலோத்துங்க சோழன்

செலுத்தும் நிலையை அடைந்தனர். ஆதித்தனும் 27 ஆண்டுகள் அரசாண்டு கி. பி. 907-ல் இறந்தான்.

இவ்வாதித்தனது புதல்வன் முதலாம் பராந்தக சோழன் என்பான். இவன் காலத்தில் சோழரது ஆட்சி உயர்நிலையை யடைந்தது. இவன் பாண்டிய நாட்டையும் ஈழநாட்டையும் வென்று தன்னடிப்படுத்தியவன்; இவனை 'மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.[1] இவன் தில்லையம்பலத்தில் பொன்வேய்ந்து அதனை உண்மையில் பொன்னம்பலமாக்கிய செய்தியொன்றே இவனது அளப்பரிய சிவபத்தியை நன்கு விளக்குகின்றது. [2]இவன் கி. பி. 907-முதல் கி. பி. 953-வரை அரசாண்டனன்..

இவ்வேந்தனுக்குப் பின்னர் இவனது புதல்வராகிய கண்டராதித்தசோழர் கி. பி. 957-வரை ஆட்சிபுரிந்தனர். இவரது ஆளுகையில் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகள் இல்லையாயினும் இவரது சிவபத்தியின் மாண்பும் செந்தமிழ்ப் புலமையும் பெரிதும் போற்றற்குரியனவாம். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் தில்லைச் சிற்றம்பலத்தெம்பெருமான்மீது இவர் பாடியருளிய திருப்பதிகம் ஒன்றுளது. எனவே, ஒன்பதாந் திருமுறையினை யருளிச் செய்த நாயன்மார் ஒன்பதின்மருள் இவ்வரசர் பெருமானும் ஒருவர் ஆவர்.[3]


  1. 6. Ins, 331 of 1927.
  2. 7. 'கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்
          காதலாற் பொன்வேய்ந்த காவலனும்'--

    விக்கிரமசோழனுலா - கண்ணி 16.
  3. 8. ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவராகிய இவ்வரசர் பெருமானது வரலாற்றைச் 'செந்தமிழில்' யான் எழுதியுள்ள 'முதற் கண்டராதித்த சோழதேவர்' என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம்.


</poem>.}}