பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேங்கிநாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல்

23

இஃது இங்ஙனமாக, கீழைச் சளுக்கியரது தாயத்தினரான மேலைச்சளுக்கிய மன்னர்களுள் ஆறாம் விக்கிரமாதித்தன் என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் பெரிய போர்வீரன். அவனுக்கும் சோழருக்கும் அடிக்கடி பெரும்போர்கள் நிகழ்ந்துவந்தன. சோழர்கள் தெற்கேயுள்ள பல மன்னர்களை வென்று தம்மடிப்படுத்தித் தாம் முடிவேந்தர்களாய் மேன்மையுற்று விளங்கினர். அங்ஙனமே மேலைச்சளுக்கியரும் தக்கணத்தின் வடபாகத்தில் பெருமையுடன் நிலவினர். இதனால் பேராண்மையும் பெருவீரமும் படைத்த இவ்விரு அரசகுலத்தினரும் ஒருவரை யொருவர் வென்று கீழ்ப்படுத்தவேண்டுமென்ற எண்ணமும் முயற்சியும் உடையவராகவே இருந்தனர். இதற்கேற்ப, முதலாம் இராசராசசோழன் காலமுதல் சோழர்கள் கீழைச்சளுக்கிய மன்னர்களுக்குத் தம் பெண்களை மணஞ்செய்து கொடுத்து அன்னோரைத் தமக்கு நெருங்கிய உறவினராகச் செய்துகொண்டதோடு தம் ஆட்சிக்குட்பட்டிருக்குமாறும் செய்துவந்தனர். இதனால் கீழைச்சளுக்கியரது உதவி மேலைச்சளுக்கியருக்குக் கிடைக்காமற் போயிற்று. அன்றியும், சோழர்களது வலிமையும் பெருமையும் வளர்ச்சியுறலாயின. இதனையுணர்ந்த மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் தன் தாயத்தினரான கீழைச்சளுக்கியரைச் சோழர்களினின்று பிரித்துத் தன்பால் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்ற கருத்துடையவனாய்க் காலங்கருதிக் கொண்டிருந்தான். அதற்கேற்ப அவன் வேங்கியின் மன்னனாகிய இராசராசநரேந்திரன் இறந்ததை யறிந்து, அதுவே தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கோடற்குத் தக்க காலம் என்று கருதித் தன் தண்ட நாயகனான சாமுண்டராயன்