உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

முதற் குலோத்துங்க சோழன்

தலைமையில் ஒரு படையை வேங்கி நாட்டிற்கனுப்பினான்.[1]

இச்செய்தியை யறிந்த வீரராசேந்திரசோழன் தன் முன்னோர்கள் காலமுதல் நெருங்கிய உறவினால் பிணிக்கப்பட்டிருந்த வேங்கிவேந்தரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாட்டையும் இழப்பது தன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் இழிவையே பயக்குமென்று துணிந்து ஒரு பெரும்படையோடு அந்நாட்டை நோக்கிச் சென்றான். அங்குக் கடும்போர் நடைபெற்றது. அப்போரில் மேலைச்சளுக்கியரது தண்டநாயகனான சாமுண்டராயன் என்பான் கொல்லப்பட்டான். அவனது படைகள் எல்லாம் சிதறுண்டு நாற்றிசையிலும் ஓடியுய்ந்தன. வெற்றியெய்திய வீரராசேந்திரசோழன் தன் மருமகனாகிய இராசேந்திரனுக்கு வேங்கிநாட்டில் ஒரு நன்னாளில் முடி சூட்டி, அந்நாட்டிலுள்ள மக்கள் எல்லோரையும் மகிழ்வுறச்செய்தான். அக் கீழைச் சளுக்கிய நாட்டின் ஒழுகலாற்றின்படி, நமது இராசேந்திரன் ஏழாம் விஷ்ணுவர்த்தனன்[2] என்னும் பெயரை முடிசூட்டுநாளில் எய்தித் 'தந்தையினும் சதமடங்கு தனயன்' என்ற ஆன்றோர் உரைக்கு இலக்காக அரசு செலுத்திவந்தான். அக்காலங்களில் அவனுக்கு உசாத்துணையாயிருந்து அவனது பேரன்பிற்குரியவனாய் ஒழுகிவந்தவன் விசயாதித்தன் என்ற அவனது சிறிய தந்தையே யென்பர். அவனது ஆட்சிக்காலத்தில் வேங்கிநாடு மிகச் செழிப்புற்றிருந்தது. குடிகளும் இன்புற்று வாழ்ந்துவந்தனர்.


  1. 2. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 26.
  2. 3. S. I. I. Vol. VI. No. 201.