உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான்காம் அதிகாரம்
குலோத்துங்கன் சோழமண்டலத்திற்கு வருதல்

சோழநாட்டில் முதலாம் இராசராசசோழன் கி. பி. 1014-ல் விண்ணுலகெய்திய பின்னர் அவனது புதல்வனாகிய முதலாம் இராசேந்திரசோழன் அரியணை ஏறினான். இவனைக் கங்கைகொண்டசோழனென்றும் வழங்குவர். இவனது ஆளுகையில் சோழமண்டலம் ஈடும் எடுப்புமற்ற நிலையை யடைந்தது. மற்றைச் சோழமன்னர்களது ஆட்சிக்காலங்களில் இச்சோழமண்டல இத்தகையதொரு சிறப்பும் பெருமையும் எய்தவில்லையென்றே கூறலாம். இவ்வேந்தன் மண்ணைக்கடக்கம், ஈழம், இரட்டபாடி, கோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம், கடாரம், பப்பாளம், இலாமுரி தேசம் முதலான நாடுகளையும், கங்கையாற்றைச் சார்ந்த சில பகுதிகளையும் வென்று பெரும் புகழுடன் விளங்கினான். இவனைப் 'பூர்வதேசமுங் கங்கையுங் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் கூறும். இவன் வடநாட்டு வேந்தர்களை வென்று கங்கைநீர் நிரம்பிய குடங்களை அவர்களுடைய தலைகளில் ஏற்றிச் சோழமண்டலத்திற்குக் கொண்டுவரச்செய்து, திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பெரியதோர் ஏரி வெட்டு வித்து[1] அக்கங்கை நீரை அதில் ஊற்றி அதற்குச் 'சோழ -


  1. 1. S. I. I. Vol. III. No. 205 ; Kanyakumari Inscription of Virarajendra Deva-Epi. Ind. Vol. XVIII. No. 4.