பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோழமண்டலத்திற்கு வருதல்

27

களத்தில் முடிகவித்து, அப்போரை நடாத்தி வெற்றி பெற்றான். இவன் தன் தந்தையையும் தமையனையும் போலவே சிறப்புடன் அரசாண்டுவந்தான். இவனும் மேலைச்சளுக்கியரோடு தொடர்ந்து போர்செய்துவந்தான். இவன் சளுக்கியரோடு நிகழ்த்திய போரொன்றில் உயிரிழந்தனன் போலும்.

பின்னர், இவனது இளவலாகிய மும்முடிச்சோழன் என்பான் இராசமகேந்திரன் என்ற பெயருடன் பட்டம் பெற்று அரசாளத் தொடங்கினான். இவன் சோழ மண்டலத்தின் ஆட்சியை அடைவதற்குமுன் தன் தந்தையாகிய கங்கைகொண்டசோழனது ஆணையின்படி சேரமண்டலத்திற்கும் பாண்டிமண்டலத்திற்கும் அரசப் பிரதிநிதியாயிருந்து சோழபாண்டியன் என்ற பட்டத்துடன் அவ்விரண்டையும் ஒருங்கே ஆண்டவன். இவன் தன் காலத்தில் சோழமண்டலத்திலுள்ள மக்கள் எல்லோரும் அமைதியாக வாழ்ந்துவருமாறு நன்னெறி வழாது செங்கோல் செலுத்தினான். இத்தகைய பெருங்குண வேந்தனும் சில ஆண்டுகளில் துஞ்சினான்.

பிறகு, இவனது தம்பியாகிய வீரராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் கி.பி. 1063-ஆம் ஆண்டில் அரசு கட்டிலேறினான். இவ் வேந்தன் பேராற்றலும் பெருவீரமும் படைத்தவன். இவன் முடிமன்னர்களான தன் தமையன்மார்களுக்கும், அன்னோரது மக்களுக்கும் மேலைச்சளுக்கியர்களால் நேர்ந்த ஆற்றொணா இன்னல்களை மனத்திற்கொண்டு, பெருஞ் செற்றமுடையவனாய் அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பெரும்படையைத்