உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

முதற் குலோத்துங்க சோழன்

திரட்டிக்கொண்டு அவர்களது இரட்டபாடி நாட்டின் மேற் சென்றான். இவன், இங்ஙனம் ஐந்து முறை படையெடுத்துச்சென்று மேலைச்சளுக்கியரது நாட்டைப் பல விடங்களிற் கொள்ளையிட்டும் சிலவிடங்களில் அழித்தும் பாழ்படுத்தினான். இம்மானக்கேட்டைப் பொறாத மேலைச் சளுக்கியர் தம் படையைத் திரட்டிக்கொண்டு இவனோடு பலவிடங்களில் போர்புரிந்தனர். இறுதியில் கிருஷ்ணையும் துங்கபத்திரையும் கூடும் இடமாகிய கூடல்சங்கமத்தில் கி. பி. 1064-ல் இருப்படைகளும் கைகலந்து பெரும் போர்செய்தன. அப்போரில் மேலைச்சளுக்கிய மன்னர்களாகிய ஆகவமல்லன், விக்கிரமாதித்தன் முதலானோர் தோல்வியுற்றுப் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர். சளுக்கிய சாமந்தர்களுட் பல்லோர் போர்க்களத்தில் உயிர் துறந்து புகழ் கொண்டனர். வீரராசேந்திரசோழனும் தன்னுடன் பிறந்த முன்னவர் எண்ணம் முடித்து வெற்றித் திருவை மணந்து, தனது தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மகிழ்வுடன் சென்று இனிது செங்கோல் ஓச்சுவானாயினன்.

இங்ஙனம் சோழருக்கும் மேலைச்சளுக்கியருக்கும் நிகழ்ந்துவந்த போர்களில் சோழகுலத்துதித்த முடி வேந்தர் சிலரும் அரசிளங்குமரர் பலரும் இறந்தொழிந்தனர். இறுதியில் எஞ்சியவர் வீரராசேந்திர சோழனும் இவனது மைந்தனான அதிராசேந்திர சோழனுமேயாவர். வீரராசேந்திர சோழனது ஆட்சியில் கி. பி. 1067-ல் இளவரசுப் பட்டங் கட்டப்பெற்ற அவன் புதல்வன் அதிராசேந்திரனுடைய கல்வெட்டுக்களில் வீரராசேந்திரனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு வரை ஆண்டு குறிப்பிடப்பட்டிருத்தலால் வீரராசேந்திரன் கி. பி. 1070-ஆம்