பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

41

ராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டு இறந்தபின்னர், சோழவளநாட்டில் குலோத்துங்க சோழன் முடிசூடியதையுணர்ந்த சளுக்கிய விக்கிரமாதித்தன் வேங்கிநாடும் சோணாடும் ஒருங்கே ஓர் அரசனது ஆட்சிக்குட்பட்டிருப்பது தன் ஆளுகைக்குப் பெரியதோர் இடுக்கண் விளைவதற்கு ஏதுவாகும் என்று கருதிக் குலோத்துங்கனது படை வலிமையையும் வீரத்தையும் குலைத்தற்குப் பெரிதும் முயன்றான். அவன், அம் முயற்சியில் வெற்றியுறும்வண்ணம் ஐந்து ஆண்டுகளாகப் படைசேர்த்தும் வந்தான். இந்நிலைமையில் விக்கிரமாதித்தனுக்கும் அவனது தமையனாகிய இரண்டாம் சோமேச்சுரனுக்கும் ஒற்றுமை குலைந்து மனவேறுபாடு உண்டாயிற்று. உண்டாகவே. விக்கிரமாதித்தன் தன் தம்பியாகிய சயசிங்கனை அழைத்துக்கொண்டு மேலைச்சளுக்கியரது தலைநகராகிய கல்யாணபுரத்தை விட்டுச்சென்றான்.[1] பிறகு மேலைச்சளுக்கியரது இரட்டமண்டலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சோமேச்சுரனாலும் விக்கிரமாதித்தனாலும் தனித்தனியாக ஆளப்படும் நிலையை அடைந்தது. இதனையுணர்ந்த குலோத்துங்கன் சோமேச்சுரனைத் தன்பாற் சேர்த்துக்கொண்டான். பின்னர், விக்கிரமாதித்தன் தான் சேர்த்துவைத்திருந்த படைகளைத் திரட்டிக்கொண்டு குலோத்துங்கனோடு போர்புரியப் புறப்பட்டான். திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுலத்துச் சயகேசி முதலானோர் விக்கிரமாதித்தனுக்குப் பேருதவி புரிந்தனர். அவனது தம்பி சயசிங்கனும் அவன் பக்கல் நின்று வேண்டியாங்கு உதவினான். சோமேச்சுரன் குலோத்துங்கன் பக்கத்திருந்து போர்


  1. 1. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம்-பக். 30.