பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

முதற் குலோத்துங்க சோழன்

புரிந்து உதவுவதாக உறுதியளித்திருந்தான். இறுதியில் குலோத்துங்கனது படையும் விக்கிரமாதித்தனது படையும் துங்கபத்திரை யாற்றங்கரையில் எதிர்த்துப் போர் செய்தன. விக்கிரமாதித்தன் தன் தமையனாகிய சோமேச்சுரன் குலோத்துங்கனோடு சேர்ந்து தன்னுடன் போர்செய்ய இயலாதவாறு ஓர் சூழ்ச்சிசெய்து இடைநின்று தடுத்தான். இப்போரிற் குலோத்துங்கன் வெற்றியாதல் தோல்வியாதல் எய்தினான் என்று கூறுதற்கிடமில்லை. ஆயினும் நம் குலோத்துங்கனுக்கு உதவி புரிதற்குத் துணைப்படை கொணர்ந்த சோமேச்சுரன் தோல்வியுற்றுத் தன் தம்பியாகிய விக்கிரமாதித்தனாற் சிறைபிடிக்கப்பட்டு நாட்டையும் இழந்தான்.[1] குலோத்துங்கனைச் சோழநாட்டினின்று துரத்துவதற்கு விக்கிரமாதித்தன் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்துவந்த பெரும் படையானது அவன் தன் தமையனைத் துங்கபத்திரைப் போரில் இங்ஙனம் தோல்வியுறச்செய்து இரட்டமண்டலத்துள் தன் தமையன்பாலிருந்த நாட்டைக் கைப்பற்றிக்கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டது. விக்கிரமாதித்தனும் மேலைச்சளுக்கிய நாடாகிய இரட்டபாடி ஏழரையிலக்கம் முழுமைக்கும் முடி மன்னன் ஆயினான். முதலாம் மேலைச்சளுக்கியப்போர் இவ்வாறு முடிவெய்தியது. இதனை முதலாம் துங்கபத்திரைப்போர் என்றும் கூறலாம்.

2. நுளம்ப பாண்டியருடன் நடத்தியபோர் :-

இது நம் குலோத்துங்கனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு போராகும். இப்போரைப்பற்றிய செய்திகள் இப்போது நன்கு புலப்படவில்லை. குலோத்


  1. 2. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 34.