பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

43

துங்கனது மெய்க்கீர்த்தியும் இதனை விளக்கிற்றில்லை. ஆயினும், இது, விக்கிரமாதித்தனுக்குத் துணையாக நின்று போர்புரிந்த நுளம்ப பாண்டியனாகிய திரிபுவன மல்ல பாண்டியனுடன் குலோத்துங்கன் நடத்திய போராய் இருத்தல் வேண்டுமென்பது ஊகிக்கப்படுகிறது. இப்போர் நிகழ்ச்சியில் நம் குலோத்துங்கன் வெற்றிபெற்றான். இவனது பகைவனாகிய பாண்டியன் கொல்லப்பட்டான். இது குலோத்துங்கன் நுளம்ப பாண்டியரோடு நடத்திய போராதலின், இதனை நுளம்ப பாண்டியப் போர் என்று கூறுதல் பொருத்தமுடையது.

3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம் போர் :- இது, குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டாகிய கி. பி. 1081-ல் நிகழ்ந்தது ; விக்கிரமாதித்தன் அவன் தம்பி சயசிங்கன் ஆகிய இருவரோடும் நம் குலோத்துங்கன் நடத்தியதாகும். இச்சண்டைக்குரிய காரணம் நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கன் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வடக்கு நோக்கிச்சென்று விக்கிரமாதித்தனது தம்பியாகிய சயசிங்கன் என்பான் அரசப்பிரதிநிதியாகவிருந்து ஆண்டுகொண்டிருந்த வனவாசியைக் கைப்பற்றிக்கொண்டு, தன்னை வந்தெதிர்த்த விக்கிரமாதித்தனோடு கோலார் ஜில்லாவிலுள்ள நங்கிலி என்னுமிடத்தில் பெரும்போர் புரிந்தனன்.[1] இப்போரில், குலோத்துங்கன் வெற்றி எய்தியதோடு விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை யாற்றிற்கப்பால் துரத்தியுஞ் சென்றான். அங்ஙனந் துரத்திச் சென்றவன் இடையிலுள்ள மணலூர், அளத்தி முதலான இடங்களில் மீண்டும் அவனைப் போரிற் புறங்


  1. 3. சோழவமிச சரித்திரச் சுருக்கம் - பக். 31.