பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

முதற் குலோத்துங்க சோழன்

ஒருவனும் சோழபாண்டியன் என்னும் பட்டத்துடன் அம் மதுரைமா நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர்.

வீரராசேந்திரன் காலத்திற்குப் பின்னர் அதிராசேந்திரன் சோழவளநாட்டை ஆண்டுவந்தபோது பாண்டியர் தாம் முடிமன்னராதற்கு அதுவே தக்க காலமெனக் கருதித் தம் நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஐந்து அரசர்களாகவிருந்து அவற்றை ஆளத் தொடங்கினர். அவர்களது ஆளுகையும் கி. பி. 1081வரை நடைபெற்றுவந்தது. குலோத்துங்கன் வடக்கே நடத்திய போர்கள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர், தெற்கேயுள்ள பாண்டி நாட்டையும் தன்னடிப்படுத்த எண்ணி, இப்பாண்டியர் ஐவர்மீதும் தும்பை சூடிப் போர்க்கெழுந்தனன்.[1] இதனையுணர்ந்த பாண்டியர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து பெரும்படையோடு வந்து இவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். இப்போரில் பெருவீரனாகிய நம் குலோத்துங்கனே வெற்றியடைந்தான். பாண்டியர் ஐவரும் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர்.[2] குலோத்துங்கன் பாண்டி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு அவ்விடங்களிலெல்லாம் வெற்றித்


  1.     'வடகடல் தென்கடல் படர்வது போலத்
           தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
          ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
          வெரிநளித் தோடி அரணெனப் புக்க
          காடறத் துடைத்து நாட்டிப் படுத்து '
                              - முதற்குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி.

  2.    'விட்ட தண்டெழ மீனவர் ஐவருங்
         கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ'
                                                 - க. பரணி--தா. 363