உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

95

விரல்களையும் விரித்து உள்ளங்கையில் அதனை வாங்கி, அவ்வோலையில் எழுதப்பெற்றுள்ள பெயரை அங்குள்ளோர் யாவரும் உணருமாறு படிப்பான். பின்னர் அங்குள்ள நம்பிமார் எல்லோரும் அதனை வாசிப்பர். அதன் பிறகு, அப்பெயர் ஓர் ஓலையின் கண் வரைந்து கொள்ளப்படும். அவ்வோலையிற் குறிக்கப்பெற்ற பெயருடையவரே அக்குடும்பிற்குரிய கிராமசபை உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர். [1]

இங்ஙனமே மற்றைக் குடும்புகளுக்குரிய உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பெறுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்புகளுக்கும் உரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தபின்னர், அவர்களுள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் முதிர்ந்தோர் பன்னிருவரைச் சம்வத்சர வாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றையோருள் சிலர் தோட்டவாரியராகவும், சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன்வாரியராகவும், சிலர் பஞ்சவாரவாரியராகவும் ஏற்படுத்தப்படுவர். எனவே, கிராமசபை, சம்வத் சரவாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன்வாரியம், பஞ்சவாரவாரியம் என்ற ஐந்து உட்கழகங் களைத் தன்னகத்துக்கொண்டு விளங்கிற்று. சபையின் உறுப்பினர் ஏதேனும் குற்றம் பற்றி இடையில் விலக்கப் பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெறாது தம் வேலைகளை நடத்துவதற்கு உரிமைபூண்டவராவர். இவர்களை ஆளுங்கணத்தார் எனவும் பெருமக்கள் எனவும் கூறுவர். இவர்கள் கூடுதற்கு ஊர்தோறும் மாளிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்களுள் நியாய விசாரணை செய்வதும் அறநிலையங்கள் நன்கு


  1. 15. சோழவமிச் சரித்திரச் சருக்கம் பக், 54.