பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

முதற் குலோத்துங்க சோழன்

ஆவணக்களரியும் (Registration Office) இருந்தது. நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச்சென்று நிலத்தின் விலையையும் நான் கெல்லையையும் தெரிவித்துத் தம் உடன்பாட்டிற்கும் உறுதி மொழி கூறி ஆவணம் காப்பிடப்பெற்ற பின்னர்த் திரும்புவர். இவ்வாவணம் என்றும் பயன்படக் கூடியதாயிருப்பின் அவ்வூரிலுள்ள கோயிற்சுவரில் அதனைப் பொறித்து வைப்பது வழக்கம்.

12. படை :- நம் குலோத்துங்கன்பால் யானைப்படையும் குதிரைப்படையும் காலாட்படையும் மிகுதியாக இருந்தன. இவன் காலத்தில் தேர்ப்படை ஒரு தனிப்படையாகக் கருதப்படவில்லை. வில், வேல், வாள், அம்பு, தடி முதலியன அக்காலத்தில் வழங்கிய படைக்கலங்கள் ஆகும். குலோத்துங்கனும் அவனது முன்னோர்களும் நிலத்திலும் கடலிலுஞ் சென்று போர்புரிவதில் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. எனவே, நம் குலோத்துங்கனிடத்துப் பல கப்பற்படைகளும் இருந்திருத்தல் வேண்டும். 'இரு முடி சோழன் தெரிந்த வில்லிகள்' என்பதனால் ஒவ்வொரு படைக்கும் வெவ்வேறு பெயரிடும் வழக்கம் உண்டு என்ற செய்தி புலனாகின்றது. படைஞர் போர் நிகழாத காலங்களில் உழுது பயிரிட்டுக்கொண்டு இருப்பது வழக்கம். வென்று கொண்ட நாடுகளில் நிலைப்படை அமைத்தலும் உண்டு. குலோத்துங்கன் சேர மண்டலத்தை வென்றபோது அங்குள்ள கோட்டாற்றில் ஒருநிலைப்படை ஒரு படைத்தலைவன்கீழ் நிறுவப்பெற்றது என்பது முன்னரே விளக்கப்பட்டது.