பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

முத்தமிழ் மதுரை


தொகுப்பாகவே திகழ்வதாகும். அதனால், நாம் தமிழ்மக்கள் வாழும் பகுதியாகிய இத்தமிழகத்தின் வரலாற்றைப் பற்றிச் சிறப்பாக அறிந்து கொள்ள வேண்டியவர்களாகின்றோம். ‘தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு’ என்றார், நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்கள். தமிழர்களாகிய நாம், நம் இனத்தின் வரலாற்றினையும், அதன் குணத்தின் சிறப்பினையும் தெளிவாக அறிந்து கொள்வது, நம்முடைய வாழ்வின் செப்பத்திற்கு உதவியாகவும், வழிகாட்டுவதாகவும் அமையும்.

பேரூர்களின் வரலாறு

ஒரு நாட்டின் வரலாறு பெரும்பாலும் அந்த நாட்டின் அரசுகளின் தோற்றமும் மறைவும் பற்றியதாகவே அமைந்திருக்கும். அந்த அரசுகள் செய்த செயல்கள், பெற்ற வெற்றிகள், கண்ட நன்னெறிகள் ஆகியவற்றை ஒட்டியே, அவ்வந்நாட்டின் வரலாறுகளும் அமைகின்றன.

அரசுகளுக்கு அடுத்தபடியாக, அவ்வந் நாட்டிலே தோன்றிய சான்றோர்களை ஒட்டியும், அவ்வந்நாட்டு வரலாறுகள் புதுத் திருப்பத்தை அடைகின்றன. ஒரு நாட்டின் வளமும் வறட்சியும் அந்நாட்டின் வரலாற்றினை உருவாக்கிச் செல்வதும் உண்டு.

இந்த நிலையிலே, தமிழ்நாட்டின் வரலாற்றை அறிய விரும்பும்போது, தமிழ் மன்னர்களின் வரலாறுகளையும், தமிழகத்தின் வளத்தினையும் முறையே அறிந்துகொள்ள வேண்டியவர்களாகின்றோம்.

இவற்றை அறியும்போது, இவர்களின் செயல்களால் நாடு அடைந்த முன்னேற்றங்களையும் பிறவற்றையும் அறிகின்றோம். வளக்குறைவினை மாற்றுவதற்கு இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலவும் நமக்கு விளங்குகின்றன. பெற்ற வளத்தினை முறையாகப் பயன்படுத்தி இவர்கள் வாழ்ந்த அந்த வாழ்வின் செப்பமும் நமக்குப் புலனாகின்றது.

இப்படி நாம் அறியும் செய்திகள் பலவற்றுக்கும் நிலைக்களன்களாக அமைந்திருந்தவை, தமிழகத்தின் பேரூர்கள் பலவுமே யாகும். ஆகவே, பேரூர்களின் வரலாறுகளை நாம் அறியும்போது, நம் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட சிறந்த பகுதியினை அறிந்து கொள்பவர்களாகின்றோம். இன்று பல நிலைகளிலே விளங்கும் நம் பேரூர்களின் பழைய சிறப்பினை அறிந்து கொள்ளவும், அவற்றைப் போற்றவும், இந்த