பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

17


அப்பொழுது இந்த மதுரை நகரமும் சிறப்புற்றதாக விளங்கியிருக்க வேண்டும் என்று, சான்றோர் உரைப்பார்கள்.

வியாசருக்கும் முற்பட்டது

வியாசரின் மகாபாரதமும் இராமாயணத்தைப் போன்று சிறப்புடைய நூல் ஆகும். குருச்சேத்திரப்போர் நடந்த காலத்தினைக் கி.மு. 900 அளவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வியாசரின் பாரதமும் அந்தக் காலத்தையொட்டி எழுந்ததாக இருக்கலாம். அதன்கண் ஒரு குறிப்பு வருகிறது. ‘பாண்டவருள் ஒருவனான அருச்சுனன், பாண்டியனின் மகளை மணந்து கொண்டான்’ என்பதே அது. இதனால், பாரத காலத்திற்கும் முற்பட அமைந்தது இம்மதுரைப்பேரூர் என்று நாம் சொல்லலாம்.

சோறு அளித்த சேரமான்

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பவன் சேரமான்களுக்குள்ளே புகழ்பெற்ற ஒருவனாவான். இவன் பாரதப்போரில் இருதிறத்துப் படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்தவன். இவ்வாறு இவனைப் பற்றிக் கூறுகிறது ஒரு வரலாறு. இவன், சேரன் செங்குட்டுவனின் தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தகப்பன் ஆவான். இவன் காலத்திலே, மதுரை பாண்டியரின் ஆட்சிக்கீழ்ச் சிறப்புற்றிருந்தது என்பது தெளிவாகும். இதனாலும், மதுரைப் பேரூர் பாரதப்போர்க் காலத்திலேயே புகழுடன் விளங்கிய பழம்பெரும் மூதூராகும் என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

மகாவமிசம் கூறுவது

கி.மு.500ஆம் ஆண்டின் அளவிலே, இலங்கையில் விசயன் என்பவன் ஒருவன் இருந்தான். இவன், மதுரைக்குப் பாண்டியனின் மகளைத் தன் மனைவியாகக் கொள்ள விரும்பித் தூதர்களை அனுப்பினான். பாண்டியனும் அந்தத் திருமணத்திற்கு இசைந்தான். பாண்டியனின் மகளை விசயன் மணந்துகொண்டு அரசனாகவும் அரியணை ஏறினான். இவனைப்போலவே, இவனுடைய தோழர்கள் பலரும், பாண்டியநாட்டுக் கன்னியர்களை மணந்து கொண்டார்கள்.

இலங்கையின் பழைய வரலாற்றைக் கூறும் நூல் மகாவமிசம் என்பது. அது மேற்கண்டவாறு கூறுகிறது. இதனால், அந்நாளிலும் பாண்டியரின் பேரூரான மதுரை மிகச்சிறப்புடன் திகழ்ந்தது எனலாம்.