பக்கம்:முந்நீர் விழா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

முந்நீர் விழா

 "இப்படித்தான் தாண்டினார்" என்று சொல்லித் தாம் இருந்த இடத்திலிருந்து ஒரே தாவாகத் தாவி மன்னர் இருந்த ஆசனத்தில் போய் உட்கார்ந்தார். அப்போது மன்னர் 'சட்'டென்று எழுந்திருந்து இடம் விட்டு வேறு ஆசனத்தில் அமர்ந்தார்.

அந்த மண்டபம் நன்றாக அலங்கரிக்கப் பெற்றிருந்தது. மேலே மாவிலைத் தோரணங்களைக் கட்டியிருந்தார்கள். பல வண்ணமுடைய நெட்டி மாலைகளைத் தொங்க’ விட்டிருந்தார்கள். புலவர் தாவியபோது நெட்டிமாலை ஒன்று அறுபட்டது.சேதுபதி மன்னர் இடம் விட எழுந்த போது, அறுபட்ட மாலை புலவர் கழுத்தில் விழுந்தது.

நெட்டிமாலை கழுத்தில் விளங்க ஆசனத்தில் வீற்றிருந்த புலவரைச் சேதுபதி பார்த்தார். பல நிறம் பெற்ற அந்த மாலை அழகாகவே இருந்தது. "உங்களுக்கு இந்த மாலையை அநுமனே பரிசாகத் தந்திருக்கிறார் என்று தோன்றுகிறது" என்று சொல்லி, மேலே கதையை நடத்தச் சொன்னார். -

அன்று முதல் யாவரும் அப்புலவரை 'நெட்டி மாலைப் புலவர்' என்றும், 'நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர்' என்றும் அழைத்து வரலாயினர். கம்பராமாயணப் பிரசங்கம் இனிது நிறைவேறியது. பட்டாபிஷேக தினத்தன்று, சர்க்கரைப் புலவருக்கு மலர் மாலையோடு நெட்டிமாலையும் அணிந்து சிறப்புச் செய்தார்கள்.

நெட்டிமாலையை அணிந்த இந்தச் செய்தியைச் சர்க்கரைப் புலவர் ஒரு சீட்டுக் கவியில் குறிப்பிட்டிருக்கிறார்.

வந்த ஜய பாரத இராமாய
ணத்திலே வாடாத நெட்டிமாலை
மருவிட்ட திருவிட்டு வழுவாது
நழுவாது வாசாம கோசரமதாய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/109&oldid=1214819" இலிருந்து மீள்விக்கப்பட்டது